Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குட்கா முறைகேடு வழக்கில் பென்-டிரைவ் மூலம் தரப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல தகவல்கள் இல்லை என புகார்: சிபிஐ பதில் தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் பென்-டிரைவ் மூலம் வழங்கப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்குமாறு சிபிஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி சிபிஐ வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது.

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, டாக்டர்.சி.விஜயபாஸ்கர், ஏ,சரவணன் ( சி.விஜயபாஸ்கர் தனி உதவியாளர்) சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், வழக்கறிஞர் வி.கார்த்திக்கேயன், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.பழனி, கே.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டபட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணையில் உள்ளது.

சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை காகித வடிவிலும் 492 ஆவணங்கள் பென்-ரைவ் மூலமாக சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், பெரு நகர சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டனர். வழக்கு நேற்று மீண்டும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பென்-டிரைவில் பல ஆவணங்கள் இல்லை.

குறிப்பாக விசாரணையின் போது கைபற்றிய மொபைல் போன், லேப்டாப் என்று உள்ளது. இந்த வழக்கில் என்ன ஆவணங்கள் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் இல்லை. இதே போல் இன்டெக்ஸ் அளித்த விபரங்கள் படி ஆவணங்கள் இல்லை. இதனை வைத்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்வது கடினம் என்று தெரிவித்தனர். இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக மனு தாக்கல் செய்யலாம் என்றார். அப்போது நீதிபதி, நீங்கள் அளித்த பென்-டிரைவில் குறைபாடு உள்ளது என்று எதிர் தரப்பில் கூறினால் அதற்கு நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும் மனு தாக்கல் என்பது தேவையில்லை என்று கூறி பென்-டிரைவில் தகவல்கள் முழுமையாக இல்லாதது குறித்து சிபிஐ தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.