Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘குரு’ மகள் புதிய கட்சி தொடக்கம்: ஓட்டுக்காக காடுவெட்டி மீது அன்புமணி, ஸ்ரீகாந்தி பாசமழை; பாமகவினர் யார் பக்கம்?

விழுப்புரம்: பாமகவில் செல்வாக்குமிக்க முக்கிய தலைவராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. மாநில வன்னியர் சங்கத் தலைவராக இருந்த இவர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்று 2 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். ராமதாசுக்கு மகன்போல் காடுவெட்டி குரு இருந்ததால், அன்புமணிக்கு கோபம் ஏற்பட்டது. இதனால், பாமகவில் இருந்து அவரை ஓரம்கட்டும் முயற்சியில் இறங்கினார். ஒரு கட்டத்தில் காடுவெட்டி குருவை முற்றிலுமாக புறக்கணித்த அன்புமணி, ராமதாசிடம் குருவை நெருங்க விடாமல் முட்டுக்கட்டையாக இருந்தார்.

இந்த சூழலில், 2018ல் உடல் நலக்குறைவால் குரு காலமானார். அப்போது அவரது மரணத்தில் சந்தேகங்களை குடும்பத்தினர் எழுப்பினர். பாமக மீது கடும் அதிருப்தியில் இருந்த குரு குடும்பத்தினரை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக இந்திய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா 2021 சட்டபேரவை தேர்தலில் ஜெயங்கொண்டத்தில் களமிறங்கினார். இதனால் பாமக வேட்பாளர் பாலு 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதன்பிறகு அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் பாமகவை தொடர்ந்து விமர்சித்து வந்த காடுவெட்டி குருவின் மகள் குரு.விருதாம்பிகை, ‘ஜெ.குரு பாமக’ எனும் புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கி அரசியலில் தனிப் பயணம் முன்னெடுத்துள்ளார். காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படை தலைவருமான கனலரசன், முதலில் திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டுவந்த நிலையில் திடீரென பின்வாங்கினார். தற்போது பாமகவில் தந்தையும்- மகனும் எதிரெதிர் துருவங்களாக நின்று மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். இதில் மகன் அன்புமணி அதிமுக-பாஜவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுவிட்டார்.

அடுத்து அவரது தந்தை ராமதாசின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க தந்தை- மகன் மோதலை நாம் நிரந்தரம் என்று கருத முடியாது. இவர்களின் மோதலில் இருபிரிவுகளாக இருந்து சிரமப்படுவதைவிட கட்சி பணிகளில் இருந்தும் விலகலாம் என்ற நிலையில் பாமகவில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை குறிவைத்து, காடுவெட்டி குருவின் மகள் காய்நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகின. குறிப்பாக சேலம்- தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், பாமகவில் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளர்களும் காடுவெட்டி குடும்பத்தினருடன் தற்போது வரை நட்புறவை தொடர்வதாக தெரிகிறது.

இதனால் வன்னியர் சமுதாய ஓட்டுகள் 3 ஆக பிளவுபடும் சூழல் ஏற்படும்பட்சத்தில், பாமக சின்னத்தை தன்வசமாக்கி களமிறங்கும் அன்புமணிக்கும், சின்னத்தில் உறுதியற்ற தன்மையில் இருக்கும் ராமதாசுக்கும் மிகுந்த நெருக்கடியை வரவுள்ள 2026 பொதுத்தேர்தல் ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே காடுவெட்டி குருவின் மகன் கனலரசனின் சமீபத்திய செயல்பாடு பாமகவில் நடுநிலையாக இருப்பினும், வன்னியர் சமுதாயத்திற்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களை முதல்வராக்க பாடுபடுவோம் என கூறி வருகிறார்.

அதேவேளையில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையோ, ராமதாசை இவ்வளவு தூரம் அன்புமணி எதிர்ப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், கூட்டணியை அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் 65வது பிறந்தநாள் விழா, வன்னியர் ஜெயந்தி விழாவாக அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் அவரது நினைவிடத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கனலரசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ராமதாஸ் தரப்பில் அக்கட்சியின் செயல் தலைவரும், அவரது மூத்த மகளுமான ஸ்ரீகாந்தி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்று மணிமண்டபத்தில் மரியாதை செய்தனர்.

இதேபோல், சென்னை பனையூர் அலுவலகத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு அன்புமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தலைமையில், மாவட்ட நிர்வாகிகளும் அரியலூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவுரவித்தனர். இந்நிகழ்வின்போது இருதரப்பும் காடுவெட்டி குருவின் சமூக நீதிக்கான செயல்பாடுகளை புகழ்பாடினர். 2026 சட்டசபை பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள், வன்னியர் சங்கத்தினரின் ஒட்டுக்களை தங்களது பக்கம் முழுமையாக திருப்பும் வகையில் காடுவெட்டி குரு மீது அக்காவும் (ஸ்ரீகாந்தி), தம்பியும் (அன்புமணி) திடீரென பாசமழை பொழிந்துள்ளது பாமக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனங்களும் எழுந்துள்ளன.