துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விஏஓ, தாசில்தாரை மிரட்டியதால் கைது போலி பெண் ஐஏஎஸ் அதிகாரி பாஜ நிர்வாகி சிறையில் அடைப்பு: ஜோடியாக தில்லாலங்கடி வேலை
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மங்கையர்க்கரசி சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம் மேல ஊத்தம்பட்டி அருகே ஸ்ரீராமபுரம். எம்பில் படித்துள்ள மங்கையர்க்கரசி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த இவர் மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நெல்லைக்கு வந்து, பாஜ நெல்லை மாவட்ட இலக்கிய அணி தலைவர் ரூபிநாத்துடன் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வசித்துள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி அவருக்காக ஒன்றிய அரசில் பல காரியங்களை செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஜ நிர்வாகி ரூபிநாத் துப்பாக்கி உரிமம் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அதுகுறித்து விசாரணை நடத்த நெல்லை தாசில்தார் ஜெயலெட்சுமி, ரூபிநாத் வீட்டிற்கு சென்றபோது அங்கிருந்த மங்கையர்க்கரசி, தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், தன்னை விசாரணை நடத்த எப்படி வரலாம் எனவும், ரூபிநாத்துக்கு உடனே துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் எனக் கூறி தாசில்தாரை மிரட்டி உள்ளார். இதுபற்றி தாசில்தார் ஜெயலட்சுமி புகாரின்படி தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். போலி ஐஏஎஸ் அதிகாரி மங்கயர்க்கரசியுடன் பாஜ நிர்வாகி ரூபிநாத் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி நெல்லை வந்தபோது ஹெலிபேடில் வரவேற்பு அளித்து படம் எடுத்துள்ளார். மேலும், மாஜி கவர்னர் தமிழிசை, எம்எல்ஏக்கள் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் விகே சிங் என பல விஐபிகளிடம் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.