Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சூடு; 162 பேர் பலி

குவாரா: நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 162 பேர் பலியாகினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் குவாராவில் உள்ள வோரோ உள்ளிட்ட 2 கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்தனர். அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தில் 162 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர். இத்தாக்குதலுக்கு, குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.