குண்டாசில் கைதானவர்களின் வழக்குகளை விசாரிக்கும் ஓய்வு நீதிபதிகள் அடங்கிய அறிவுரை கழக கிளை துவக்கம்: 20 மாவட்டங்களுக்கான மனுக்கள் மதுரையில் விசாரணை
மதுரை: குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய அறிவுரைக் கழகம் மதுரையில் நேற்று தொடங்கப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரின் முறையீட்டை விசாரித்து குண்டர் சட்ட நடவடிக்கை சரியா, தவறா என உத்தரவிடும் அறிவுரை குழுமம் சென்னையில் மட்டும் இயங்கி வந்தது. இதனால், பாதிக்கப்பட்டோர் சென்னை சென்று வருவதில் நேரம் மற்றும் செலவினம் அதிகமாக இருந்தது. இதனால், அறிவுரை கழகத்தின் கிளையை மதுரையில் தொடங்க தென்மாவட்டத்தினரின் கோரிக்கை வைத்தனர்.
இதன்படி, மதுரை ஆனையூர் கிழக்கு மண்டல அலுவலகம் அருகில் அறிவுரை கழகத்தின் கிளையை, இக்குழுமத்தின் தலைவராக உள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாட்ஷா நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், திருச்சி, தென்காசி, அரியலூர், கோவை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருப்பூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களின் மனுக்களை இக்கழகம் விசாரிக்கும்.
அறிவுரை கழகம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களின் வழக்குகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிவெடுக்க முயற்சி செய்யும். ஒவ்வொரு வழக்கையும் விசாரணைக்கு எடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்களுக்கு, 10 நாட்கள் அவகாசம் வழங்கி, முறையான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும். விசாரணை தேதி அன்று, 2 மணி நேரத்துக்கு முன், கைதியை ஆஜர்படுத்த வேண்டியது, சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளின் பொறுப்பு.
இதுகுறித்து நீதிபதி கே.என்.பாட்ஷா கூறுகையில், ‘‘குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை கொண்டு வந்த ஆணை நகல்கள் அனைத்தும் இங்கு பதிவு செய்யப்படும். இங்கு கைதியை மட்டும் விசாரிப்பதில்லை, கைதியுடன் வரும் தந்தை, மனைவி மற்றும் உறவினர்கள் விசாரிக்கப்படுவர். எழுத்துப்பூர்வமாக தந்தாலும் விசாரிக்கப்படும். தனிப்பட்ட உரிமை சட்டத்திற்கு புறம்பாக உள்ளதா என்று விசாரிக்க இந்த அறிவுரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வழக்கறிஞர்கள் வர மாட்டார்கள். சந்தேகம் இருந்தால் காவல் துறை அதிகாரிகளிடம் விசாரிப்போம். குற்றத்தை திரும்ப திரும்ப செய்தால் அதனை கருத்தில் கொண்டு விசாரிப்போம். கைதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரிப்போம்’’ என்றார்.