Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கின்னஸ் சாதனை படைத்த கூந்தல் அழகி!

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், 8 அடி 10.5 அங்குலம் (273.18 செ.மீ) நீளமுள்ள கூந்தலை வளர்த்து, உலகின் மிக நீண்ட கூந்தலைக் கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

எக்காலம் ஆனாலும் இன்னமும் பெண்கள் அவர்கள் கூந்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இன்றும் நிறுத்திய பாடில்லை. பொறுமை, பாரம்பரியம் மற்றும் அர்ப்பணிப்பு என பல மெனெக்கெடல்கள் இருந்தால்தான் ஆரோக்கியமான கூந்தல் சாத்தியப்படும். அதிலும் இப்போதெல்லாம் கேட்கவே வேண்டாம், வாழ்க்கை முறை, உணவு, அவசர வாழ்க்கை என இருக்கும் நான்கு முடியை காப்பாற்றினால் போதும் என அதற்கு கொடுக்கும் முக்கியத்துவமே நம்மை மூச்சிறைக்க வைக்கிறது. எனினும் இன்னமும் ஆசிய, இந்தியப் பெண்கள் அதில் கைதேர்ந்தவர்கள்தான். இதோ அந்தப் பாரம்பரியத்தின் உச்சத்தை உலகமே வியக்கும் வகையில் தொட்டுக்காட்டியுள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா.

சிறு வயதில் தொடங்கிய ஆசை ஸ்மிதாவுக்கு 14 வயதாக இருந்தபோது, 1980-களின் இந்தித் திரைப்படக் கதாநாயகிகளின் நீண்ட தலைமுடியைப் பார்த்து வியந்தார். தானும் அதுபோல கூந்தல் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் உருவானது. தாயின் ஆதரவோடும், பாரம்பரியக் கூந்தல் பராமரிப்பு முறைகளோடும் தனது கூந்தலை வளர்க்கத் தொடங்கினார். அதுவே பின்னாளில் அவரது அடையாளமாக மாறும் என்று அவர் அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இவ்வளவு நீளமான கூந்தலைப் பராமரிப்பது எளிய காரியமல்ல. ஸ்மிதா வாரத்திற்கு இருமுறை மட்டுமே தனது தலைமுடியை அலசுகிறார். அதிலேயே முழு சக்தியும் இழந்து அடுத்தடுத்து வேலைகளில் ஈடுபட முடியவில்லை என்கிறார்.

கூந்தலைக் அலசுவதற்கும், சீவுவதற்கும், உலர்த்துவதற்கும் மட்டுமே தினமும் குறைந்தது 2 முதல் 3 மணி நேரங்கள் தேவைப்படுகின்றன. தலைமுடியைச் சீவும்போது உதிரும் முடியைக் கூட அவர் வீசியெறிவதில்லை; கடந்த 20 வருடங்களாக உதிர்ந்த தன் முடிகளைப் பத்திரமாகச் சேகரித்து வைத்துள்ளார்.

ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, பாரம்பரிய தாவர எண்ணெய் மற்றும் இயற்கைப் பராமரிப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறார் ஸ்மிதா.

அவரது பல வருட காலப் பொறுமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் பலனாக, 8 அடி 10.5 அங்குல நீளக் கூந்தல் கொண்ட உயிருடன் வாழும் பெண் என்ற கின்னஸ் உலக சாதனை அவரைத் தேடி வந்தது. அவர் வீதியில் நடந்து செல்லும்போது, மக்கள் வியப்புடன் அவரைப் பார்ப்பதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் அவருக்குப் பெருமிதத்தைத் தருகிறது. இவருக்கு முன்பு உத்தரகாண்ட் பகுதியைச் சேர்ந்த ரேணு தரியல் என்னும் பெண் 8 அடி 10 அங்குல நீள முடியுடன் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையைத்தான் தற்போது ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா முறியடித்திருக்கிறார். கின்னஸ் சாதனையைப் பொருத்தவரை இந்த நீளமான முடி சாதனை பெரும்பாலும் இந்திய மற்றும் ஆசிய பெண்கள்தான் சாத்தியப்படுத்துகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

ஒரு பெண்ணின் இடைவிடாத முயற்சியும், அர்ப்பணிப்பும் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வைக்கும் என்பதற்கு ஸ்மிதாவின் இந்தக் கூந்தல் சாதனை ஒரு சிறந்த சான்றாகும். எதுவும் ஈஸி இல்லப்பு!

- எஸ். ஆர்த்தி