குரூப் 4 பணிக்கு தேர்வானவர்கள் சரியான சான்றிதழை பதிவேற்ற கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: குரூப் 4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 4ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், கணிணி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக/சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக வருகிற 23ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மீள பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் தங்களது குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தங்களது ஒருமுறைப் பதிவு தளம் (ஓடிஆர்) வாயிலாக மீள பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.