Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: போட்டி தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களில் அலுவலர்கள், ஊழியர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், கோட்ட தீயணைப்பு அலுவலர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோன்று, நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பல்வேறு துறைகளில் உதவியாளர்,

பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப் 2, 2 ஏ தேர்வும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வும் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை தற்போதைய விதிகளில் இருப்பதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு (பிசி, பிசி(எம்), எம்பிசி அண்டு டிஎன்சி, எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.

அவ்வாறு உயர்த்தப்படும் வயது உச்சவரம்பு பின்வருமாறு அமையும். அதன்படி குரூப் I தேர்வுகளில் பொதுப்பிரிவினர், தற்போதைய வயது வரம்பு 32ல் இருந்து 37 வயதாகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பு 42ல் இருந்து 47 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47ல் இருந்து 52 வயதாகவும் உயர்த்தப்படுகிறது. அதுபோன்று குரூப்-II மற்றும் II-A தேர்வுகளில் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பு 30ல் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது.

ஆனால் ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பான 40ல் இருந்து 45 வயதாக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.  மேலும் குரூப் 4 (உயர் கல்வி தகுதி பெற்றவர்கள்), பொதுப்பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவரம்பு இல்லை, மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 வயதாக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

குரூப்4 ( உயர்கல்வி தகுதி இல்லாதவர்கள்- பிசி, பிசி(எம்), எம்பிசி அண்டு டிஎன்சி) பொதுப்பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 35 வயதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32 வயதில் இருந்து 37 வயதாகவும், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர் 40 வயதில் இருந்து 45 வயதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினர் 42 வயதில் இருந்து 47 வயதாகவும் உயர்த்தப்படுகிறது.

மேலும் எஸ்சி, எஸ்சி (ஏ), எஸ்டி, ஆதரவற்ற விதவைகள் பொதுப்பிரிவினர் 30 வயதில் இருந்து 35 வயதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினர் 35ல் இருந்து 40 வயதாகவும், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர் 40ல் இருந்து 45 வயதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினர் 45ல் இருந்து 50 வயதாகவும் உயர்த்தப்படுகிறது. இந்த வயது உச்சவரம்பு உயர்வு நேற்று முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம், வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* குரூப் I தேர்வுகளில் பொது பிரிவினர், தற்போதைய வயது வரம்பு 32ல் இருந்து 37 வயதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பு 42ல் இருந்து 47 ஆகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47ல் இருந்து 52 வயதாகவும் உயர்த்தப்படுகிறது.

* குரூப்-II மற்றும் II-A தேர்வுகளில் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பு 30ல் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

* மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு தற்போதைய வயது வரம்பான 40ல் இருந்து 45 வயதாகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.