தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாக திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத்தொழிலான உழவுத்தொழிலை மேம்படுத்தி, சாகுபடி பரப்பை அதிகரித்திடவும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திடவும் `கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ எனும் திட்டம் தமிழ்நாடு அரசால் கடந்த 2021- 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் அரசின் முழு மானியத்தைப் பெற்று 8 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைத்து, 500 மாங்கன்றுகளை வளர்த்து, தரிசு நிலத்தை சோலையாக மாற்றியுள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி. மாங்கன்றுகளுக்கு மத்தியில் ஊடுபயிராக உளுந்து மற்றும் நிலக்கடலையையும் சாகுபடி செய்து அசத்தி வரும் புண்ணியமூர்த்தியைச் சந்தித்து பேசினோம். ``வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து 3வது தொகுப்பாக எனது 8 ஏக்கர் வயலில் மாங்கன்று நட்டுள்ளேன். 500 மாங்கன்றுகளை அரசே இலவசமாக வழங்கியது. சொட்டுநீர் பாசனத்தையும் முழு மானியத்தில் அமைத்துக் கொடுத்தனர். நானும் எனது தம்பிகள் சிலம்பரசன், புகழேந்தி ஆகியோரும் இணைந்து முழுமையாக இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளோம்’’ என்று தங்களைப் பற்றிக்கூறியவர், தங்களது சாகுபடி அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
``மாங்கன்று நடுவு செய்வதற்கு முன்பு 4 முறை வயலை நன்கு உழுது, மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் மற்றும் மண்புழு உரத்தை இட்டு மீண்டும் ஒருமுறை உழுது வயலை தயார்படுத்தினோம். மா நடவு செய்ய ஆடிப்பட்டம் சிறந்தது. இரண்டரை முதல் மூன்று அடி ஆழம் குழிகள் இருக்க வேண்டும். அகலம் ஒன்றரை அடி. அதில் பத்து கிலோ மண்புழு உரம் இட்டு, இதனுடன் உயிர் உரங்களை கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கிலோ வேப்பம்புண்ணாக்கு, சிறிது சுண்ணாம்பு தூள் இட்டு நட வேண்டும். இதனால் வேர் சம்மந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படும். பின்னர் மாங்கன்றுகளை நடவு செய்தோம்.செடி காற்றில் அசையாமல் குச்சியை நட்டு கயிற்றால் கட்டவேண்டும். தேவைக்கு ஏற்றபடி தண்ணீர் விடலாம். ஒருசில சத்து குறைபாடு உள்ள மண்ணில் மா நடவு செய்யும்பொழுது கண்டிப்பாக நுண்ணூட்ட சத்துக்கள் இடவேண்டும். இல்லையென்றால் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கும். மா மரங்கள் கோடை வறட்சியைத் தாங்கும் திறன் உடையவை, இருந்தாலும் வறட்சியானது மாம்பழ உற்பத்தியை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடுவது அவசியம். அதேசமயம் மரத்தின் அடியில் நீர் தேங்காமல்பார்த்துக்கொள்ளவேண்டும்.
நாங்கள் சொட்டுநீர் பாசனமுறையை மேற்கொள்வதால் நிலத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்பட தண்ணீர் விடுகிறோம். தற்போது 2 வருட கன்றாக நன்கு வளர்ந்துள்ளது. மா வளர்ப்பில் பராமரிப்பு மிக அவசியமாகும். பழங்கள் காய்த்த பின்பு ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது 2 ஆண்டுக்கு ஒருமுறையோ கவாத்து செய்தல் வேண்டும். பலவீனமான மற்றும் வளர்ச்சி குன்றிய கிளைகளை நீக்கிவிட்டு, அனைத்து கிளைகளிலும் சூரிய ஒளி நன்கு படும்படி கவாத்து செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றரை வருடங்களுக்கு பின்னர் காய்க்க ஆரம்பிக்கும். அப்போதுதான் மரங்களின் வளர்ச்சி நன்கு இருக்கும். வருடம் இருமுறை கண்டிப்பாக இயற்கை உரமிடவேண்டும். மா மரங்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயார் செய்யவும் பயன்படும்.
மா மரங்களை சாறு உறிஞ்சும் பூச்சி, சாம்பல் நோய் மற்றும் தளிர் இலைகளை சேதப்படுத்தும் பூச்சிகள் அதிகம் தாக்கும். அப்போது கற்பூரக் கரைசல் தெளித்தால் இந்த நோய்களை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். கற்பூரக் கரைசல் தெளிப்பதால் அதிகமான பூக்கள் தோன்றும். நவம்பர் மாதம் முதல் ரகங்களுக்கு ஏற்ப பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். ஒரு சதவீதம் பூக்கள் மட்டுமே பிஞ்சுகள் ஆகும். பூக்கள் பூக்கும் சமயத்தில் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. அவ்வாறு செய்தால் பூக்கள் உதிர வாய்ப்புகள் அதிகம். தேங்காய்ப்பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கும்போது பூ உதிராது. அதிக பிஞ்சுகள் உருவாக வாய்ப்பு கிடைக்கும். பனிப்பொழிவு அதிகமானாலும் பூக்கள் உதிரும்.
ஐந்து வருடங்கள் வரை கவாத்து செய்ய தேவையில்லை. அதன்பிறகு தரையில் படும் கிளைகளை மட்டுமே கவாத்து செய்ய வேண்டும். அறுவடை முடிந்ததும் காய்ந்த கிளைகள் மற்றும் சில அடர்த்தியான கிளைகளை நீக்கலாம். சூரிய ஒளி கிளைகளில் நன்கு படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது பெங்களூரா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி ரக கன்றுகளை நட்டிருக்கிறோம். மண்புழு உரங்களை நாங்களே தயார் செய்து கொள்கிறோம். தேக்கு இலைகள் உதிர்ந்து விழுவதை வரப்புகளில் சேமித்து வைத்து அதையும் உரமாக்கி கொள்கிறோம். கடந்த 2 ஆண்டுகளில் மாங்கன்றுகளுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து ஆகியவற்றை பயிரிட்டு வருகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மரங்கள் நன்கு வளர்ந்துவிடும். அப்போது ஊடுபயிர் சாகுபடி செய்ய இயலாது. மேலும் பண்ணைக்குட்டை அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறோம். 100 குழி அளவுள்ள பண்ணைக்குட்டைதான். இதில் கட்லா, ரோகு, மிருகாள், புல்கெண்டை, கண்ணாடி கெண்டை என்று 1000 மீன் குஞ்சுகள் விட்டுள்ளோம். மேலும் சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவையும் சாகுபடி செய்துள்ளோம்.
இயற்கை உரம் தயாரிப்புக்காக 6 நாட்டுமாடுகள் வளர்த்து வருகிறோம். 10க்கு அதிகமான ஆடுகளும் உள்ளன. மாடுகளுக்கு தேவையான தீவனப்புல்லையும் நாங்களே சாகுபடி செய்கிறோம். மேலும் நெல் மற்றும் ஆலைக்கரும்பும் பயிரிட்டுள்ளோம். என் தம்பி சிலம்பரசன் எம்.சி.ஏ., பட்டதாரி, மற்றொரு தம்பி புகழேந்தி இன்ஜினியர். அவர்கள் இருவரும் என்னுடன் காலையில் வயல்வேலைகளை முடித்துவிட்டுதான் மற்ற பணிகளை பார்ப்பார்கள். எங்களுக்கு நெல், கடலை, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற சாகுபடிகளின் மூலம் உழவுப்பணி, களை எடுத்தல், விதை விதைத்தல் போன்ற செலவுகள் போக சராசரியாக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. நானும் என் தம்பிகளும் கூட்டுக் குடும்பமாக உள்ளோம். அதனால் விவசாயப்பணிகளை சிறப்பாக செய்ய முடிகிறது. தமிழக அரசு எங்களுக்கு முழு மானியத்தில் ஆழ்துளை கிணறு, மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்பை செய்து கொடுத்திருப்பதால் தரிசாக போட்டு வைத்த பகுதி இப்போது பசுஞ்சோலையாக மாறி இருக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
புண்ணியமூர்த்தி - 95854 80031
நானோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு காப்புரிமை!
சென்னையில் உள்ள காப்புரிமை அலுவலகம் பூசணி வகை காய்கறிகளில் பழ ஈக்களை கவரும் நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மெதுவான வெளியீடு கொண்ட உருவகம் கண்டுபிடிப்புக்கான செயல்முறை காப்புரிமையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது. பூசணி வகை காய்கறிகளில் பழ ஈக்களை கவரும் நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மெதுவான வெளியீடு கொண்ட உருவகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பாகும். இதில் பழ ஈக்களை ஈர்க்கும் வாசனை வேதிப்பொருள் மெதுவாக வெளியேறும். இது நுண்துளை அமைப்பில் செருகப்பட்டு மேம்பட்ட உருவாக்கம் கொண்டது. எனவே, அதிக நேர மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது. இதை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது உகந்தது.இதன் பயன்பாடு குறித்து பேராசிரியர் கண்ணன் கூறுகையில், பூசணி விவசாயிகள், பழ ஈக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீள இது ஒரு சிறந்த வழிவகையாக செயல்படும். இந்த பழ ஈக்களை கவரும் கவர்ப்பான்களை பயிரின் பூக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் அமைத்துக்கொள்ளவும். 100 நாட்களுக்கு ஒருமுறை கவர்ப்பான்களை பொறிகளில் மாற்றிக்கொள்ளவும். அவ்வாறு மாற்றும்பொழுது பழ ஈக்கள் அதில் பிடிபட்டிருப்பதைக் காணலாம் என்கிறார்.


