மழை, காற்று, வெப்பம் உள்ளிட்ட இயற்கை சக்திகள் குறைந்தாலும், மிகுந்தாலும் விவசாயத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் இந்த சக்திகளின் ஆற்றலை முறைப்படுத்தி பயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் எது தேவையோ, அதை சரியாக வழங்குவதற்கு இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் பசுமை குளோ ஹவுஸ். இது ஒரு சிறந்த விவசாய முறையாக இருப்பதால் வெளிக் காலநிலை எதுவாக இருந்தாலும் உள்ளே ஒரு நிலையான பருவ நிலையை உருவாக்கி பயிர்களுக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்க வசதி செய்கிறது. இந்த பசுமை குளோ ஹவுஸ் பொதுவாக பிளாஸ்டிக் ஷீட்டுகள் அல்லது கண்ணாடி மாதிரியான பொருட்களால் மூடியதாக இருக்கும். இதில் வெளிச்சம் ஊடுருவி வரும். அதே நேரத்தில் வெப்பமும் கட்டுப்படுத்தப்படும். அப்படி ஒரு நுணுக்கமான சூழல்.
வெயில் அதிகமா இருந்தாலும், குளிர் அதிகமாக இருந்தாலும் பசுமை குளோ ஹவுசின் உள்புறம் உள்ள சீதோஷ்ண நிலை எப்போதும் நிலையாக இருக்கும். இதனால பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். வெளியில் உள்ள நிலத்தில் ஒரு செடி ஒரு மாதத்தில் அடையும் வளர்ச்சியை பசுமை குளோ ஹவுசில் பதினைந்து நாளில் அடையும். வெப்பநிலையும், ஈரப்பதமும் சீராக இருப்பதால் செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உதாரணத்திற்கு தக்காளிச் செடியை எடுத்துக் கொள்வோம். அது வெளியில் நீர் இல்லாமல் வளர்ச்சிக்குத் திண்டாடும் அல்லவா! அதே தக்காளிச் செடி குளோ ஹவுசில் இருந்தால் அற்புதமாக வளர்ந்து பிரமாதமான மகசூலைத் தரும். வெளி வெப்பம் 40 டிகிரியாக இருந்தாலும், குளோ ஹவுசில் 28 டிகிரிக்குள் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுவதுதான் இதற்கு காரணம். இதனால் செடியின் உள் உயிரியல் செயல்கள் சாதாரணமாக நடக்கும். நாள்தோறும் சில மணி நேரம் சூரிய ஒளி பெறும் சூழ்நிலை தானாக உருவாக்கப்படும். சூழலுக்கு ஏற்ப காற்றோட்டம் சேரும்போது ஒரு இயற்கை நிலத்தை விட சீரான சூழலில் வளர்ச்சி கிடைக்கும்.
இந்த முறையைப் பின்பற்றுற விவசாயிகள் பெரும்பாலும் உயர் மதிப்புள்ள காய்கறிகள், மலர்கள், ஹெர்ப்ஸ் போன்ற பொருட்களை சாகுபடி செய்கிறார்கள். குடைமிளகாய், பீட்ரூட், வெள்ளரி, லெட்டூஸ், ஸ்ட்ராபெர்ரி, ரோஜா, ஜெர்பெரா, கார்னேஷன் போன்ற சந்தையில் நல்ல விலை கிடைக்கக்கூடிய விளைபொருட்கள் குளோ ஹவுசில் அதிகளவில் விளைகின்றன. குளோ ஹவுஸ் சாகுபடியில் கிடைக்கும் விளைச்சலான, வழக்கமான முறைகளில் கிடைக்கும் மகசூலை விட அதிகமாகவே இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 2-3 டன் காய்கறி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்வோம். குளோ ஹவுஸ் முறையில் அதே பரப்பளவில் 6-8 டன் வரைக்கும் உற்பத்தி கிடைக்கும். இப்போது கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த குளோ ஹவுஸ் மூலம் ஆர்கானிக் மரபுப் பயிர்களையும் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். பயிர்கள் சுத்தமாகவும், மேம்பட்ட சூழ்நிலையிலும் வளர்வதால் வாடிக்கையாளர்களும் விரும்பி வாங்குகிறார்கள். சந்தையில் விலைமதிப்பும் கூடுதலாக கிடைக்கிறது. ஏற்றுமதிக்கும் ஏற்றதாக உள்ளது.
இந்தக் கட்டமைப்பு லோ டெக் கிரீன் ஹவுஸ், மீடியம் டெக் கிரீன் ஹவுஸ், ஹை டெக் கிரீன் ஹவுஸ் என 3 வகைகளில் உள்ளன. லோ டெக் அமைப்பானது பிளாஸ்டிக் ஷீட் கட்டமைப்பாக இருக்கும். நம்மூரில் இதுதான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் செலவும் குறைவாக இருக்கும். மீடியம் டெக் அமைப்பில் காற்றாடி மாதிரியானவெப்பநிலைக் கட்டுப்பாடு, காற்றோட்ட வசதி, மைஸ்டிங் வாட்டர்கள் போன்ற வசதிகள் இருக்கும். ஹை டெக் அமைப்பில் சென்சார்கள், தானியங்கி பாசனம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாட்டுக்கான முழுமையான இயந்திர வசதிகள், நுண்ணறிவு கண்காணிப்பு எல்லாம் இருக்கும். முதலீடும் அதிகமாக இருக்கும். ஆனால் துல்லியமான பராமரிப்பு கிடைக்கும்.இதிலும் சில சவால்கள் உள்ளன. தொழில்நுட்ப அறிவு இல்லாமல் இந்தக் கட்டமைப்பை வைத்து பயிரிட முடியாது. குறைந்தபட்சம் ஒரு பயிற்சி, ஆலோசனை தேவைப்படும். மேலும் பிளாஸ்டிக் ஷீட்டுகளை மூன்று ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டி வரும். வெப்பக் கட்டுப்பாட்டு சாதனங்கள் பழுதானாலும், உடனே சரி செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். இல்லையென்றால் பயிர்கள் பாதிக்கப்படும். பசுமை குளோ ஹவுஸ் ஒரு வசதியான தொழில்நுட்பம்தான் ஆனாலும் இதற்கு உரிய கவனம் தேவை.
நகர்ப்புற விவசாயத்திற்கு இது ஒரு சிறப்பான தொழில்நுட்பம். வீட்டின் மாடிகளில் கூட சிறிய அளவில் குளோ ஹவுஸ் அமைத்து லெட்டூஸ், ஹெர்ப்ஸ், ஸ்பினாச், பச்சைக் கீரைகள் போன்றவற்றை வளர்க்க முடியும். பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், ஆர்கானிக் ஸ்டோர் உள்ளிட்டவை இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யலாம். இந்த உற்பத்தி பசுமையானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.


