*பணிகள் தொடரும் என அரியலூர் கலெக்டர் உறுதி
அரியலூர் : தொடர்ச்சியாக நடவு பணியில் ஈடுபட்டு 18.50 லட்சம் பனை விதைகள் நட்டு அரியலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. பசுமை மாவட்டமாக உருவாக்க முயற்சிக்காக பணிகள் தொடரும் என அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்த மரமாக விளங்கும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் வனபரப்பை அதிகரிக்கும் வகையிலும் அரியலூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கடந்த செப்டம்பர் 2025 பணிகள் தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்கள் தோறும், ஏரி, குளங்கள், வரத்து வாரிகள், கிராம சாலைகளின் ஓரங்களில் ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள், வனத்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, உள்ளிட்ட கள அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களை ஒருங்கிணைத்து தற்போது வரையில் 18,50,000 எண்ணிக்கையிலான பனை விதைகள் தொடர்ச்சியாக நடவு செய்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ச்சியாக நேற்று வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார். மேலும், இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது, பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்குவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் என உறுதியளித்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் சிவராமன், உதவி திட்ட அலுவலர் (ஊ/வே) நந்தகோபாலகிருட்டிணன், உதவி இயக்குநர் (ஊரட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், மலர்க்கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையைச் சேர்ந்த களப்பணியாளர்களான மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
