Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரும் ஆறுதல்

வளைகுடா நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக கப்பல்கள் செல்வது, ஈரான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தடைபட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஓட்டல்கள், உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை ஓட்டல்கள், உணவகங்கள், சாலையோர கடைகள் என்று அனைத்தும் தொடர்ச்சியாக இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். கடந்த 10ம் தேதி, தனது தலைமையில் ஆய்வு கூட்டம் ஒன்றை முதல்வர் நடத்தினார். அப்போது ‘‘எரிபொருள் தட்டுப்பாட்டினை சரி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்புடைய துறைகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த அறிவுரைப்படி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் தலைமை அரசு செயலாளர் ஆகியோர் 3 நாட்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள் சிறுதொழில் முனைவோருக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவிற்கு (எல்பிஜி) பதிலாக மின்அடுப்புகளை பயன்படுத்துகிறது. அப்படி பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும்.

ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம்வரை, இந்த மானியம் வழங்கப்படும். எரிவாயு பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின்அடுப்புகள், மின்சூடேற்றிகள் உள்ளிட்ட மின்உபகரணங்களை கொள்முதல் செய்யலாம். இதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியத்துடன் கடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவீதம் அல்லது ரூ.2 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவை அனைத்திற்கும் மேலாக, ‘‘எரிவாயு பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படுகிறது. இதனால் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை 194 உழவர் சந்தைகளில் எந்தவித கட்டுப்பாடு இல்லாமலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடர்பாட்டினால் மீதமாகும் பாலினை, உற்பத்தியாளர்களிடமிருந்து கட்டுப்பாடுகள் இல்லாமல் ஆவின் கூட்டுறவு பால் சங்கங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் விவசாயிகள் மீதான முதல்வரின் தனித்துவமான பார்வை’’ என்றால் அது மிகையல்ல.