சென்னையை தலைமையகமாக கொண்டு, பல ஆண்டுகளாக தமிழகத்திலேயே பைக்குகளை தயாரித்து வரும் ராயல் என்பீல்டு நிறுவனம், முதன்முறையாக மாநிலத்திற்கு வெளியே தனது புதிய ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள சத்தியவேடு (தடா) பகுதியில், சுமார் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த புதிய தொழிற்சாலை அமைய இருக்கிறது. 1955ம் ஆண்டிற்கு பிறகு ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழகத்தை தாண்டி வேறொரு மாநிலத்திற்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தற்போதைய சூழல், புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, புதிய நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர தயக்கம் காட்டுகின்றன.
முந்தைய திமுக அரசில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் முதலீடு செய்வதை ஊக்குவித்து வந்தார். தற்போதைய நிலைமை அவ்வாறு இல்லாத காரணத்தால், பெரு நிறுவனங்கள் மிக எளிதாக தமிழகத்தை விட்டு வெளியே முதலீடு செய்ய முன்வந்துவிட்டன. இதுபோன்ற நடவடிக்கை, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. வரவிருக்கும் காலங்களில் பல புதிய முதலீடுகளை தமிழகம் இழக்க நேரிடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்திற்கு பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டு வந்ததில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு முக்கிய பங்கு உண்டு.
உலக அளவில் அவர்களுக்கு இருந்த தொடர்புகளும், நவீன அணுகுமுறைகளும் முதலீட்டாளர்களை எளிதாக கவர்ந்தன. ஆனால், தற்போதைய நிர்வாக சூழலில் இத்தகைய தகுதிவாய்ந்த நபர்களின் வழிகாட்டுதல்களும், முதலீட்டாளர்களுடனான நேரடி தொடர்புகளும் விடுபட்டு போயுள்ளது. உலகளாவிய சந்தையில், முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன் படைத்த இவர்களின் பங்களிப்பு இல்லாதது, தமிழகத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆந்திர அரசு, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தேவையான நிலத்தை ஒதுக்கி, முதலீட்டை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது.
இப்புதிய ஆலையின் மூலம் ஆந்திராவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தின் செய்யார் பகுதியில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்த ரூ.958 கோடி முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இதாவது கிடைக்குமா? இதுவும் பறிபோய் விடுமா? என்ற கவலை இளைஞர்களிடையே எழுந்துள்ளது. இனியாவது, அடுத்தக்கட்ட பெரிய முதலீடு அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல், தமிழகத்திலேயே முதலீடு செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில்துறை கொள்கைகளையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை.


