தமிழகத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் பல கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் மணல் குவாரிகள் மூடப்பட்டன. தற்போது அரசுக்கு வருவாய் இழப்பை ஈடுகட்டவும், தட்டுப்பாட்டை போக்கவும் கடலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. மணல் குவாரிகளால், சுற்றுச்சூழல் சீர்குலைவு, மணல் கொள்ளையை ஊக்குவிப்பது என இரட்டை தீமைகள் ஏற்படுவதை உணர்ந்தும், அவற்றை திறக்க தவெக அரசு வேகம் காட்டி வருவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. 10 முதல் 12 மணல் குவாரிகளை திறக்க அரசு தீர்மானித்திருப்பது, காவிரி பாசன மாவட்டங்களுக்கும், அதையொட்டியுள்ள பகுதிகளுக்கும் பெரும் தீமைைய விளைவிக்கும்.
தமிழ்நாடு முழுவதும் கட்டுமான மணலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்கும் வகையில், குஜராத்தில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் ஜியோ இன்பார்மாடிக்ஸ் நிறுவனம் (Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics) மூலம் செயற்கைக்கோள் வாயிலாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது ஏற்புடையது அல்ல. கட்டுமான மணலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க, வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது உள்ளிட்ட ஏராளமான மாற்றுவழிகள் உள்ளன.
இதை, அரசு பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். செயற்கைகோள் வாயிலாக கண்காணிப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவது தடுக்கப்படும் என்பது சாத்தியமல்ல எனவும் கூறியுள்ளனர். 2023-ம் ஆண்டில் 25 புதிய மணல் குவாரிகளை திறக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தபோது, அவற்றிலிருந்து அதிகபட்சமாக 7.51 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே மணல் வெட்டி எடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், 27.70 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது. அதே நிலைதான் இப்போதும் தொடரும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். இவ்வளவு மணல் வெட்டி எடுக்கப்பட்டால் காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகி விடும் என கவலை தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதன் மூலம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைப்பதை தடுத்து காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற கர்நாடக அரசு துடிக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசு, டெல்டா பகுதியில் மணல் குவாரிகளை திறந்தால், காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அதை பாலைவனமாக்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். எனவே, டெல்டா பகுதியில் மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.


