Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை புறக்கணியுங்கள்: நம்பர் 1 வீராங்கனை திடீர் அழைப்பு

ரோம்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் கடந்த மாதம், மொத்தப் பரிசுத் தொகையை சுமார் 10% அதிகரித்து, மொத்தப் பரிசுத் தொகை 61.7 மில்லியன் யூரோக்களாக (72.1 மில்லியன் டாலர்) உயர்த்துவதாக அறிவித்தனர். இது கடந்த ஆண்டை விட 5.3 மில்லியன் யூரோக்கள் அதிகமாகும். ஆனால், உண்மையான புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபடுகிறது.

போட்டி வருவாயில் தங்களுக்குக் குறைவான பங்கே கிடைக்கும் என்றும், ரோலண்ட் கரோஸ் போட்டி வருவாயில் வீரர்களின் பங்கு, 2024-ல் 15.5% ஆக இருந்தது, 2026-ல் 14.9% ஆகக் குறையும் என்றும் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரெஞ்சு ஓபன் பரிசுத் தொகை குறித்து பெரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, நம்பர் 1 வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் மற்றும் முதல் இடங்களுக்குள் உள்ள முன்னணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் வருவாயில் தங்களுக்குப் பெரிய பங்கு கிடைக்காவிட்டால், டென்னிஸ் வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று சபலென்கா அழைப்பு விடுத்து உள்ளார். நேற்று தொடங்கிய இத்தாலி ஓபன் தொடரில் பங்கேற்ற அவர் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது பிரெஞ்ச் ஓபன் குறித்து கேள்விக்கு, ‘‘நாங்கள் இல்லாமல் இந்தப் போட்டியே இருந்திருக்காது, அந்தப் பொழுதுபோக்கும் இருந்திருக்காது. நிச்சயமாக எங்களுக்கு அதிக சதவீதப் பணம் வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன்.

ஒரு கட்டத்தில் நாங்கள் இதைப் புறக்கணிப்போம் என்று நினைக்கிறேன். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அதுதான் ஒரே வழியாக இருக்கும் என்று நான் உணர்கிறேன்’’ என்றார். மேலும், ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யு.எஸ். ஓபன் ஆகிய நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் சிறந்த பிரதிநிதித்துவம், சுகாதார வசதிகள் மற்றும் ஓய்வூதியங்களையும் தர வேண்டும் என்று வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.