Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரும் சூழ்ச்சி

ஆம் ஆத்மி கட்சியின் எம்பிக்கள் 7 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, பாஜவின் தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் என்ற தகவல் அரசியல் களத்தில் அதிர்ச்சியை விதைத்தது. இது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் பாஜ செய்யும் மிக மோசமான அரசியல் என்று ஆம் ஆத்மி கட்சி, தனது கொதிப்பை வெளிப்படுத்தியது. இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்கு பாஜ முயற்சிக்கிறது. இதற்கு எம்பிக்கள் துணை நின்று, பஞ்சாப் மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர்’ என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி மாநில கட்சிகளை உடைப்பதும், ஆட்சியை கவிழ்ப்பதும் பாஜவுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 வருடங்களாகவே இதை தொடர்ச்சியாக செய்து வருகிறது பாஜ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதற்கான நிகழ்வுகளையும் அவர்கள் பட்டியலிடுகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஒரு பிரிவினர், உத்தவ் தாக்கரே தலைமையில் பிரிந்து, பாஜவுடன் கூட்டணி போட்டு ஆட்சி அமைத்தனர். இதனால் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில், அஜித்பவார் தலைமையிலான ஒரு பிரிவினர், சரத்பவாரிடம் இருந்து பிரிந்து பாஜ கூட்டணியில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது. பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் பாஜவால் பிளவுபட்டது. இதே போல், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், தினகரன் தலைமையிலும், சசிகலா தலைமையிலும் அதிமுக 3 பிரிவுகளாக நிற்பதற்கு பாஜவின் கைங்கர்யமே காரணம்.

இந்த வகையில் தான், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் எம்பிக்களை தன்வசம் இழுத்து, ஒரு பெரும் சூழ்ச்சியை முடித்துள்ளது பாஜ. ஆட்சி கவிழ்ப்பு என்பது, அவர்கள் தொடர்ந்து நடத்தும் ஜனநாயக படுகொலையாக உள்ளது. 2014ம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 42 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அங்கு வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜ, முதல்வர் நபம் துகிக்கு எதிராக காய் நகர்த்தியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கலிகோபுல் தலைமையில் 21 எம்எல்ஏக்களை போர்க்கொடி தூக்க வைத்தது.

பின்னர், அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு பாஜ, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதில் முதல்வர் நபம்துகி தோல்வியுற்ற நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதற்கு பிறகு 2016ம் ஆண்டு தனது திட்டப்படி கலிகோபுல்லை முதல்வராக்கியது பாஜ. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வரை சென்று போராடி, வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் நபம்துகி. முதல்வர் பதவியை இழந்த கலிகோபுல், மன அழுத்தத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு, அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இதே ரீதியில் 2017ம் ஆண்டு மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் வென்ற போதும், கைவரிசையை காட்டியது பாஜ. காங்கிரஸ் மட்டுமன்றி பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம், சிக்கிமில் ஜனநாயக முன்னணி என்று பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு வலை விரித்து, தனக்கான பொம்மை அரசை அமைத்துள்ளது பாஜ. இந்த வகையில் ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில், மாநிலக் கட்சிகளை உடைக்கும் பாஜவின் சூழ்ச்சி தொடர்கிறது. இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்ப்பது காலத்தின் அவசியம். இதை விட முக்கியமாக, சுய லாபத்திற்காக கட்சி மாறும் எம்பி, எம்எல்ஏக்களை இனம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டியதும் கட்டாயம்.