Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரும் சூழ்ச்சி...?

இந்தியாவில், 2025ம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறியுள்ளது பீகார் சட்டப்பேரவைத் தேர்தல். நாட்டிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட பின் நடந்த சட்டப்பேரவை தேர்தல் என்று சிறப்பு இதற்கு உண்டு. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன. ஆனால், தேர்தல் முடிவுகள் நிதிஷ்குமார் மற்றும் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது.

தற்போது நடந்து முடிந்துள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு, சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பீகாரில் 1951ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு, இந்த தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகின. இந்த முறை பீகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது, பெண் வாக்காளர்களில் 8.15 சதவீதம் பேர் அதிகளவில் வாக்களித்துள்ளனர். பெண்களின் வாக்குப்பதிவு சதவீதமும் அதிகமாக இருந்தது ஏன் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது.

இம்மாநிலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்களைவிட 10 முதல் 20 சதவீதம் வரை பெண்கள் வாக்கு கூடுதலாக பதிவாகியிருந்தது. இதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்க வேண்டும் என்கிற கேள்வியும் கூடவே எழுந்தது.  அந்த சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது, இம்மாநில தேர்தலுக்கு சற்று முன்பு, செப்டம்பர் மாதத்தில் நிதிஷ்குமார், பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கினார். அதில், பீகார் முழுவதும் உள்ள பெண்களின் வங்கி கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தொகை அனுப்பப்பட்டது.

இது, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் தொடர்ந்தது. ஒவ்வொரு பெண்கள் வங்கி கணக்கிலும் தலா 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது. ேதர்தலுக்கு சில மாதங்கள் முன்பே இம்மாநிலத்தில் 75 லட்சம் பெண்களுக்கு, தலா பத்தாயிரம் ரூபாய் பணம், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து ‘இண்டியா’ கூட்டணி சார்பில், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

கடந்த நவம்பர் 11ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஆக்ஸிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பின்படி, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறும், ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். என்.டி.ஏ-வுக்கு 121 முதல் 141 இடங்களும், மகா கூட்டணிக்கு 98 முதல் 118 இடங்களும் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டது.

ஆனால், இதையும் தாண்டி, நிதிஷ்-பா.ஜ. அணி பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. இதுவும் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்னும் கட்சியை நிறுவி, பீகார் தேர்தலில் போட்டியிட்டார். இதற்கு முன்பு, பல மாநில தேர்தல்களில் வெற்றியை வசமாக்கிய இவர், இம்மாநில தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளார். இதுவும், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இம்மாநிலத்தில், ஒன்றிய தேர்தல் ஆணையம், ‘எஸ்.ஐ.ஆர்’ திருத்தம் மேற்கொண்டு, இண்டியா கூட்டணிக்கு ஆதரவான 17 லட்சம் வாக்காளர்களை நீக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டு, நிதிஷ்-பா.ஜ., கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்துகின்றனர்.