Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: 14 மசோதாக்கள் நிலுவை

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 18 மசோதாக்களில் 4 ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதம் 14 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு மசோதாக்களை சட்டமன்றத்தில் இயற்றி அதனை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. இதனை கிடப்பில் போட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்த ஆளுநரின் செயலுக்கு கொட்டு வைக்கும் விதமாக சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அமைந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு 3 மாதத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது.

அதோடு நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்கள் எல்லாம் செல்லாதவையாகிவிடும் என்று ஆளுநர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அப்படி 10 மசோதாக்களை உச்சநீதிமன்றமே, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. இதனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆளுநர் அனுமதி இல்லாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வர் இருப்பதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்பட அனுமதி இல்லை என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருப்பது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் ஆளுநரை கண்டித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், நிர்வாக செயல்பாட்டில் உச்சநீதிமன்றம் தலையிடுகிறது என்று கூறி சூப்பர் நாடாளுமன்றம் என்று உச்சநீதிமன்றத்தை விமர்சனம் செய்திருந்தார். மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கரை சந்தித்து துணை வேந்தர்கள் மாநாட்டை கடந்த மாதம் ஏப்.25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நீலகிரியில் கூட்டினார். ஆனால் அதில் சொற்ப எண்ணிக்கையிலான துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக நிலைமையை உணர்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 2 மசோதாக்களுக்கு ஒப்புதலை வழங்கினார். அதன்படி, 8 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியார் பல்கலைக்கழங்கள் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல்களை வழங்கினார்.

இம்மாதம் 8ம் தேதி கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலை வழங்கினார். இந்தநிலையில், 2025-26ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 4 மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மீதம் 14 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.