ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை: பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் ஒன்றாம் எண் நுழைவாயில் முன்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத் என்பவரை பிடித்து விசாரித்தார். அப்போது வெடிக்காத நிலையில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. என்ஐஏ விசாரணை முடிவடைந்த நிலையில், கருக்கா வினோத்திற்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் சுமார் 680 பக்கம் கொண்ட குற்ற பத்திரிகை கடந்த ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.
என்.ஐ.ஏ தரப்பில் வழக்கறிஞர் என்.பாஸ்கரன் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்ட வினோத் தான் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். உள்நோக்கத்துடன் தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மலர்விழி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் வினோத் என்ற கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
