ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி 'கருக்கா' வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இவன் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2023ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.