Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேச்சு

மதுரை: ஆளுநர் ஆய்வில் அதிகாரிகள் பங்கேற்கக் கூடாது என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் அர்லேகர் விருந்தினர் மாளிகையில் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார், இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரை மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலந்து கொன்ட மின்வாரியத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: அரசு திட்டங்களை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் அந்த உரிமை உள்ளது. யார் ஆய்வு செய்தாலும் அதிகாரிகள் பங்கேற்க கூடாது. அரசு அனுமதியின்றி அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க கூடாது. இதுபோல ஆளுநர் செய்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு மட்டுமே ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது. எந்தவித அதிகாரமும் இல்லாமல் ஆளுநர் ஆய்வு செய்ய முடியாது. அதை இந்த அரசு அனுமதிக்காது. எனவே, ஆளுநர் தேவையில்லாமல் நிர்வாக தலையீடு செய்வது கூடாது. அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து எம்பி வெங்கடேசன் பேசுகையில், ‘ஒன்றிய அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் உரிமை அரசியல் அமைப்பு சட்டப்படி எம்பிகளுக்கு மட்டுமே உள்ளது. அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும். எங்களை தவிர்த்து வெளியே உள்ள யாருக்கும் பல துறைகளை ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. 39 அமைச்சகத்தின் கீழ் 96 துறைகளை ஆய்வு செய்கிற அதிகாரம் கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி குழுவுக்கு தான் உள்ளது. இது மதுரை மாவட்டத்தில் நூறு சதவீதம் அமல்படுத்தப்படும் என தெளிவு படுத்துகிறோம். இதை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்’ என்றார். ஆளுநரின் ஆய்வில் பங்கேற்ற அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அவர்களை வைத்துக் கொண்டு அமைச்சரும், எம்பியும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆய்வு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் விஜய் இதுகுறித்து மவுனமாக இருக்கிறார்.