Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணம் 2 சதவீதமாக குறைப்பு: அரசு உத்தரவு

சென்னை: சொத்து விற்பனை கிரைய பத்திரங்கள் போன்று, விற்பனை சான்றிதழ்களுக்கு பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேரடியாக உரிமையாளரிடம் இருந்து சொத்து வாங்கும்போது, அதற்கு விற்பனைக்கான கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு சொத்தின் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வையும் 2 சதவீதம் பதிவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வங்கி உத்தரவு, கடன் வசூல் தீர்ப்பாயம், ஏலம் வாயிலாக கைமாறும் சொத்துக்களுக்கு, விற்பனை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். இந்த சான்றிதழை சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். தற்போது இதற்கான பதிவுக்கட்டணம் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

விற்பனை சான்றிதழ் பதிவு செய்யும்போது, அதற்கு பதிவு கட்டணம் 4 சதவீதம் வசூலிக்கப்பட்டது. அதை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து விற்பனை சான்றுக்கு பதிவு கட்டணத்தை குறைத்து பதிவுத்துறை தலைவர் அரசுக்கு பரிந்துரை வழங்கினார். இதனை கவனமாக பரிசீலித்த அரசு பதிவுத்துறை தலைவரின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, விற்பனை சான்றிதழ்களுக்கான பதிவு கட்டணம் 4 சதவீத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.