Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை: கல்வியாளர்கள் கடும் கண்டனம்

சென்னை: ஒரு மாதம் ஆகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை, என கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மறுதிறப்பு செய்யப்பட்டு ஒரு மாத காலம் கடந்த நிலையிலும், மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கல்வியாளர் நெடுஞ்செழியன் இந்த தாமதத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும், புதிய எதிர்பார்ப்புகளுடனும் பள்ளிக்கு வரும்போது அவர்களிடம் பாடப் புத்தகங்கள் இல்லை என்று சொல்வது அவர்களின் கற்றல் ஆர்வத்தையும், திறனையும் அடியோடு பாதிக்கும்.

கையில் பாடப் புத்தகங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் எதைக் கொண்டு, எப்படி மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியும்? ஒரு வகுப்பறைக்குக் கல்வி கற்பிக்க பாடப் புத்தகம் என்பது மிக மிக இன்றியமையாதது. பள்ளிகளை திறப்பதற்கான தேதிகளை தீர்மானிக்கும் அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை, அதற்கு முன்பாக மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை ஒரு ‘செக்லிஸ்ட்’ மூலம் சரிபார்க்க தவறிவிடுகிறது.

அரசுகளோ, அரசியல் கட்சிகளோ மாறலாம்; ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளைத் தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் போய்ச் சேரவில்லை என்பது மிக வருந்தத்தக்க விஷயம். இது போன்ற அலட்சியப் போக்குகளால் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விச் சுழற்சியும் கால அட்டவணையும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

ஆரம்பக் கல்வி பயிலும் கீழ் வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, உயர் வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, இந்தத் தாமதம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.கல்வியைக் கற்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குப் புத்தகங்களைக் கூட வழங்க முடியாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம் என்றால், தமிழகக் கல்வித்துறை எந்த அளவுக்குக் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் கல்வி அமைச்சராகவும், தற்போது சீனியர் அமைச்சராகவும் இருப்பவர்கள் கூட இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி, அமைச்சரவைக் கூட்டங்களில் இது போன்ற முக்கியப் பிரச்னைகளை விவாதித்து ஏன் விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கும் போதே இந்த நிலை நீடிப்பது பெரும் பின்னடைவாகும்.

இன்றைய காலகட்டத்தில் கல்விக்கூடங்கள் தங்களின் முதன்மை நோக்கமான கல்வியை முன்னிலைப்படுத்துவதை விட்டுவிட்டு, சினிமா, பாடல்கள் மற்றும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. விழாக்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமையைக் கல்விக்குக் கொடுக்காமல், கல்வியைப் பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறோம். இது நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்களை முழுமையாக விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.