Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பலர் முன்னிலையில் அரசு பள்ளி மாணவியை அவமானப்படுத்திய அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை? தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திமுக புகார்

* குழந்தை பாதுகாப்புச் சட்டங்களை மீறி மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு

சென்னை: அமைச்சர் கீர்த்தனா பள்ளியில் குழந்தைகளை நடத்திய விதம் குறித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக பெண் எம்.பி. சல்மா புகார் அளித்துள்ளார். தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளியை ஆய்வு செய்யும்போது வீடியோ கேமராவுடன் சென்று வீடியோ எடுத்துள்ளார். பள்ளியில் சிறிய குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். பின்னர் ஆசிரியை மூலம் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டுள்ளார்.

அப்போது மாணவியை கிண்டல் செய்யும்விதமாக பேசியுள்ளார். தொடர்ந்து கடைசி பெஞ்ச் மாணவிகள் குறித்தும் அவர் கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார். பள்ளி மாணவர்களின் நம்பிக்கையை அடியோடு காலி செய்யும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதாகவும், அதோடு அரசு பள்ளி மாணவர்கள் குறித்து அவரது எண்ணம் தவறாக இருப்பதாகவும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, தானும் ஒரு அரசு பள்ளி மாணவிதான் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது அவர் அரசு பள்ளியிலேயே படிக்கவில்லை என்பதும், அவர் அரசு உதவி பெறும் பள்ளியில்தான் முடித்துள்ளார். உயர்கல்வியும் தனியார் கல்லூரியில்தான் படித்துள்ளார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்புக்கிடையே, திமுக எம்பி ராஜாத்தி என்ற சல்மா, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2ம் தேதி அன்று, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு மைனர் பெண் மாணவியை பொதுவெளியில் அவமதித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தின் வீடியோக்கள் குழந்தையின் அடையாளத்தை மறைக்காமல் சமூக ஊடகத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இந்த வீடியோ பொதுவெளியில் வெளியிடப்படுவதற்கு காரணமே அமைச்சர் அல்லது அவரது அதிகாரத்தின் கீழ் செயல்பட்டவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கீர்த்தனா அந்த இளம் மாணவியிடம் அவளது ஆங்கில மொழித் திறன் குறித்து உரையாடியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. குழந்தைக்கு உகந்த கற்பித்தல் முறையின்படி அந்த மாணவியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அமைச்சர் அந்த ஆய்வில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு முன்னிலையில் குழந்தையை கேலி செய்து ஏளனம் செய்தார். தடுமாறும் முன்வரிசை மாணவர்களை ”கடைசி பெஞ்ச் மாணவர்களுடன்” ஒப்பிட்டு அமைச்சர் கூறிய கருத்து, உளவியலாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பொதுச் சேவைக்கான இத்தகைய உயரிய பதவியில் இருக்கும் கீர்த்தனா, மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலமாக திகழும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டத்தால் வகுக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு உட்பட்டு நடந்திருக்க வேண்டும். அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். வெறும் சமூக ஊடக பிரபலத்திற்காக அப்பாவி குழந்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இவருடைய செயல்கள் இளம் குழந்தைகளின் மனதில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அமைச்சர் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கப் பங்களித்துள்ளார். மாநில அமைச்சர் பதவியில் இருக்கும் கீர்த்தனாவின் செயல், இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் கடமைகளுக்கு முரணானவை ஆகும். அமைச்சரின் செயல்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ பாதுகாப்புகளுக்கும் முரணானவை. அமைச்சர் மைனர் மாணவியின் கவுரவத்தை பாதித்துள்ளார், அவரது செயல்கள் குழந்தையின் கல்வித் தேடலை முடக்கியுள்ளன.

கேமராவுக்கு முன்னால் ஒரு குழந்தையின் திறமைகளைப் பற்றி விவாதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகமே தவிர, அது ஒருவரின் அறிவுத்திறன் அல்லது திறமையின் அளவைக் குறிக்காது. மைனர் மாணவியை அமைச்சர் கீர்த்தனா பொதுவெளியில் கேலி செய்தது, ஒரு உணர்வற்ற மற்றும் தவறான செயலாகும். பொது நலனுக்காகச் சேவை செய்ய பதவி வகிக்கும் அவரது பொறுப்பை இது முற்றிலும் அலட்சியப்படுத்துவதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற பிரச்னைகள் வந்தால், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமே தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கும். ஆனால், தற்போது ஒரு பெண் எம்பி புகார் கூறியுள்ளார். இதனால் அந்த ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

* மாணவியை பொதுவெளியில் அமைச்சர் அவமதித்துள்ளார்.

* வீடியோக்கள் குழந்தையின் அடையாளத்தை மறைக்காமல் பகிரப்பட்டுள்ளது.

* இந்த வீடியோவை பரப்ப காரணமே, அமைச்சர் அல்லது அவரது அதிகாரத்தின் கீழ் செயல்பட்டவர்கள் தான்.

* மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகமே தவிர, அது ஒருவரின் அறிவுத்திறன் அல்லது திறமையின் அளவைக் குறிக்காது.