பணகுடி: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்டையார் குளத்தை சேர்ந்தவர் கருணாநிதி (47). இவர் கடந்த 2022ல் சென்னையில் சினிமா துறையில் கேண்டீன் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தினேஷ் தனியார் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு செல்லும் போது தினேஷை கருணாநிதி அடிக்கடி சந்தித்துள்ளார்.
இதில் இருவரும் நண்பர்களாகினர்.அப்போது கருணாநிதி பிஎஸ்சி படித்த தனது மனைவி நித்திய கல்யாணிக்கு அரசு வேலை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அதற்கு தினேஷ், தமிழ்நாடு மின்வாரியத்தில் ஆட்கள் இருப்பதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.10 லட்சம் கேட்டு, அட்வான்ஸாக ரூ.3 லட்சத்தை 2022 டிசம்பர் மாதம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராததால், கருணாநிதி பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த மாதம் 23ம் தேதி தினேஷ் வள்ளியூர் வந்ததை அறிந்து அங்கு சென்ற கருணாநிதியை காரில் அழைத்துச் சென்று சாத்தான்குளம் அருகே இசக்கியம்மன் கோயிலில் வைத்து தினேஷ், அவரது தந்தை மற்றும் அவருடன் இருந்த இருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் பணகுடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி பணகுடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் நடிகர் தினேஷ், அவரது தந்தை மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைதொடர்ந்து நேற்று பணகுடி காவல்நிலையத்தில் விசாரணைக்கு வழக்கறிஞருடன் ஆஜரான தினேஷிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நடிகர் தினேஷ் வெளியிட்ட வீடியோவில், ‘எனது பெயரை கெடுத்தால் நான் பயந்து விடுவேன் என்று ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அதில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.
