இயல் இசை நாடக மன்றப் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் பேச்சு: அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக புகார்!
சென்னை: அரசுப் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் பேசப்பட்டதாக திமுக புகார் அளித்துள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழும்பூரில் பேசிய விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனரிடம் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் புகார் மனு அளித்திருக்கிறார்.
எழும்பூர் அருங்காட்சிய அரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று பேசும்போது இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறியதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
இந்த பேச்சினை முன்வைத்து தற்பொழுது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனரிடம் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் புகார் மனு அளித்துள்ளார்.
இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் தர முன்வந்ததாகப் பொதுமேடையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் இடைத்தரகராகக் குறிப்பிடப்பட்ட லயோலா மணி ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


