Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்

*புதுகை ஆய்வு கூட்டத்தில் நிலவரி திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி இனங்கள் குறித்து, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி,, மாவட்ட ஆட்சித்தலைவர்.மெர்சி ரம்யா, முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தெரிவித்ததாவது;

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கான பட்டா மாறுதல், நில அளவைகள் குறித்து எண்ணற்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி இனங்கள் குறித்தும், நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின் போது, அனைத்து வகையான சான்றுகளையும் 15 நாட்களுக்குள் முடித்திடவும், 7 முதல் 10 நாட்களுக்குள் முடிக்கக்கூடிய சான்றுகளை காலதாமதமின்றி முடித்திடவும், முழுபுலம் பட்டா மாறுதல் மாதத்திற்கு எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்பது குறித்தும், அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் எந்த கிராமத்தில் இருந்து பெறப்படுகின்றன என்பது குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும் தள்ளுபடிக்கான காரணங்களை கண்டறிந்து தள்ளுபடி சதவீதத்தினை 10 சதவீதத்துக்குள் வைத்துக்கொள்ளவும், மேலும் விண்ணப்பங்களை இரண்டு மாதத்திற்கு மேல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வரப்பெறும் பட்டா மாறுதல் இனங்களில் புல எண் மற்றும் உட்பிரிவு எண்கள் தவறாக குறிப்பிட்டு அனுப்புவதை தவிர்த்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசு அலுவலர்கள் அனைவரும் விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் தலைமை நிலஅளவர்களுக்கான ஆய்வுக் கூட்டம், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்.மெர்சி ரம்யா, முன்னிலையில் நடைபெற்றது. பின்னர், புதுக்கோட்டை வட்டம், வாகவாசல், தட்டாம்பட்டி வருவாய் கிராமம் மற்றும் தென்னதிரையான்பட்டி கிராமத்தில், பயிர் சாகுபடி செய்துள்ளதை, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறையில், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி,, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ).ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை),சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), மண்டல துணை இயக்குநர் (நில அளவைத் துறை).சசிக்குமார், உதவி இயக்குநர் (நில அளவைத் துறை).அப்துல் ஜாகிர் உசேன், கிராம நிர்வாக அலுவலர்கள் வசந்தகுமார்,.அசோக்குமார், நில அளவை ஆய்வாளர்.ஜெய்சங்கர், அனைத்து வட்டாட்சியர்கள், தலைமை நிலஅளவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.