Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் மீது மருத்துவர் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த லாவண்யா என்பவர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். புளியங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், மாவட்ட மருத்துவத் துறை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி மாதத்தில் 15 நாட்கள் மாற்றுப் பணியாக அங்கு சென்று பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக புளியங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் லாவண்யா பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் விஜய் பிரதாப் சிங் என்பவர், பணியில் இருந்த செவிலியர் லாவண்யாவிடம் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் சக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, செவிலியரைத் தாக்கியதாகக் கூறப்படும் மருத்துவர் விஜய் பிரதாப் சிங் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. செவிலியரை மருத்துவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் பொற்றிவாட்சியிடம் கேட்டபோது, செவிலியர் லாவண்யாவும் மருத்துவரும் விளையாட்டாகவே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவிலியரின் குடும்பத்தினரும் இதுதொடர்பாகக் கடிதம் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் ஒருவரை மருத்துவர் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.