எங்கள் தோப்பில் 10 ஏக்கரில் பழ மரங்கள், தென்னை மரங்கள் உள்ளன. சப்போட்டா, கொய்யா, நெல்லி, மாங்காய் போன்றவற்றை வாடிக்கையாளர்களே நேரில் வந்து பறித்துக்கொண்டு, எடைக்கு ஏற்ப காசு கொடுப்பார்கள். சில நேரங்களில் இவற்றில் பாதி பழங்கள் வீணாகும். இப்படி வீணாவதைத் தடுக்க மதிப்புக்கூடுதல் ஒன்றே தீர்வு என்று அறிந்து, மதிப்புக்கூட்டுதல் பற்றி பயிற்சி எடுத்தோம். இப்போது பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம்” என பேச்சை ஆரம்பித்தார் கலைச்செல்வி. திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையத்தைச் சேர்ந்த இவர், பல வித பழமரங்களை சாகுபடி செய்து வருவதோடு, அதில் கிடைக்கும் விளைச்சல் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு நாம் சென்றபோது ஒவ்வொரு பொருட்களின் மதிப்புக்கூட்டுதல் பற்றி ஆர்வமாக விளக்கினார்.
``முதலில், நெல்லிக்காய் துருவலோடு உப்பு, மிளகு சேர்த்து மவ்த் ஃப்ரஷ்னர் செய்தோம். நெல்லிக்காய் பல சுவைகள் உள்ள கனி. இந்த மவ்த் ஃப்ரஷ்னரிலும் பலசுவைகள் இருக்கும். நெல்லிக்காயில் வெல்லத்தைச் சேர்த்து மிட்டாயும் செய்தோம். இது நன்றாக விற்கிறது. நெல்லிக்காயோடு உப்பு, இஞ்சி எலுமிச்சை சேர்த்து ஒரு உலர் தயாரிப்பை செய்தோம். நெல்லியை நறுக்கிக் காயவைத்து வேறு ஏதும் சேர்க்காமல் உலர் நெல்லி செய்தோம். தேயிலை டீக்கு மாற்றாக நெல்லி துருவல் மற்றும் நெல்லிப் பொடியை கலந்து நெல்லிக்காய் டீ மிக்ஸ் செய்கிறோம். இதையே `டிப் டீ’ வடிவத்திலும் கொடுக்கிறோம். நெல்லிக்காயோடு நாட்டுச்சர்க்கரை சேர்த்து நெல்லிக்காய் ஜாம் செய்கிறோம். 3 மாதங்கள் முயற்சி செய்து இந்த நெல்லிக்காய் ஜாம் உற்பத்தி உத்தியைக் கண்டுபிடித்தோம்.
மாங்காயோடு உப்பு மிளகாப்பொடி சேர்த்து உலர்த்தி `ட்ரை மேங்கோ’ செய்கிறாம். இது 90களில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் விற்ற மாங்காய்பத்தையின் சுவையும் மணமும் கொண்டு மலரும் நினைவுகளைத் தருவதால், பலரும் விரும்பி வாங்குகிறார்கள். சப்போட்டாப் பழத்தை உரித்து, விதை நீக்கி, வேறு எதையுமே சேர்க்காமல் அப்படியே உலர்த்தி உலர் சப்போட்டா தயாரிக்கிறோம். இது ஒன்றரை மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இது எங்கள் தனித்துவமான தயாரிப்பு. இது தற்செயலாக உருவான தயாரிப்பு. நெல்லிக்காய்க்காக வாங்கிய உலர்த்தி (ட்ரையர்), நெல்லி சீசன் இல்லாதபோது, சும்மா இருந்தது. அப்போது சப்போட்டா அதிகமாக இருந்தது. சப்போட்டாப்பழம் ஓரிரு நாட்கள் மட்டுமே கெடாமல் இருக்கும். ஆகவே பழுத்த சப்போட்டாவை உலர்த்தியில் போட்டுக் காயவைத்தோம். அது பல நாட்களுக்குச் சுவை மாறாமலும், கெடாமலும் இருந்தது. இப்படி உருவானதே உலர் சபோட்டா.
சங்குப்பூ, செம்பருத்தி, ஆவாரம்பூக்கள் மூலம் டீ, டிப் டீ செய்கிறோம். முருங்கை, கறிவேப்பிலை, வல்லரைப்பொடி செய்து கொடுக்கிறோம். கொய்யா இலையிலிருந்து டீ செய்கிறோம். இதற்காக மிக்சி, சோலார் ட்ரையர், எலெக்ரிக் ட்ரையர் போன்ற இயந்திரங்களை வைத்திருக்கிறோம்’’ என்றவர், தோட்டத்தின் விவசாயம் மற்றும் பராமரிப்பு பற்றியும் பேசினார்.
``எனது தந்தை 25 ஆண்டுகளாக பழமரங்களை வளர்க்கிறார். 450 சப்போட்டா மரங்களும், 150 மாமரங்களும், 100 கொய்யா மரங்களும், 50 நெல்லிக்காய் மரங்களும் உள்ளன. தொடக்கத்திலிருந்தே இயற்கை விவசாயம்தான். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் மட்கிய எரு மட்டும் வைப்போம். மரக்கிளைகளில் பூச்சித்தாக்குதல் வந்தால் அக்கிளைகளை வெட்டி, தோட்டத்தின் பெரிய குழியில் போட்டு மூடி விடுவோம். அவை மட்கி உரமாவதோடு, நீரையும் தேக்கி வைத்துக்கொள்ளும். 3 ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும், அருகிலிருக்கும் வாய்க்காலில் இருந்து பாசன நீரைப் பெறுகிறோம்.
தொடக்கத்தில் வாட்ஸ்சப் மூலம் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்தோம். பிறகு சில சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அதன்பின்னர், நாங்களே சொந்தமாக aruviorganics.com என்ற வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் எங்கள் பொருட்களை விற்கிறோம். இந்தியா முழுவதும் எங்கள் பொருட்கள் நேரடியாகவும், அமேசான் மூலமும் விற்பனை ஆகின்றன. தொடக்கத்தில் நான் மட்டுமே இந்த மதிப்புக்கூட்டு வேலைகளைக் கவனித்தேன். இப்போது 3 பணியாளர்களும் வேலை செய்கிறார்கள். நான்கைந்து ஆண்டுகள் எங்கள் சொந்த முதலீட்டிலேயே மதிப்புக்கூட்டுதல் செய்தோம். இந்த ஆண்டு மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சிறுதொழில் கடன் பெற்று உற்பத்தியை அதிகரித்தோம். முதலாம் ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்குதான் விற்பனையானது. இப்போது விற்பனை சில மடங்குகள் அதிகரித்துள்ளது. நான் இப்போதும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய பயிற்சி களில் பங்கேற்று தொடர்ந்து கற்கிறேன். மதிப்புக்கூட்டுதல் பற்றி விவசாயப் பல்கலைக் கழகங்களில் மாதந்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள். மதிப்புக்கூட்ட விரும்பும் விவசாயிகள், அங்கு பயிற்சி எடுப்பது சிறந்தது” என்ற விளக்கத்தோடு வழிகாட்டுதலும் வழங்கினார்.
தொடர்புக்கு:
கலைச்செல்வி: 90477 38198.

