Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கூகுள் கிளாஸ்ரூம்!

கூகுள் கிளாஸ்ரூம்(Google Classroom)… மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளி மற்றும் படிப்பு தொடர்பான விஷயங்களை எளிதாக ஒருங்கிணைக்க உதவும் கல்விச் செயலி. குறிப்பாக ஆன்லைன் கல்வி அதிகரித்த பிறகு, இந்த செயலி பள்ளி வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும்.

வகுப்பறை கற்றலை டிஜிட்டல் முறையில் மிகவும் எளிமையாக்குகிறது. ஆசிரியர்கள் வீட்டுப்பாடம், குறிப்புகள், பாடக்குறிப்புகள், வீடியோ லிங்குகள், அசைன்மென்ட்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் பகிரமுடியும். மாணவர்கள் அவற்றை எந்த நேரத்திலும் திறந்து பார்த்து படிக்கமுடியும்.

வீட்டுப்பாடம் எழுத மறந்துவிட்டால் அல்லது நோட்டுப் புத்தகம் பள்ளியில் மறந்துவிட்டால் சிக்கல் ஏற்படும். ஆனால் கூகுள் கிளாஸ்ரூம் செயலி மூலம் அனைத்துத்தகவல்களும் ஆன்லைனில் சேமிக்கப் படுவதால், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடிகிறது. இது படிப்பில் ஒழுங்கையும் பொறுப்புணர்வையும் உருவாக்க உதவுகிறது.

மாணவர்கள் அசைன்மென்ட்களை நேரடியாக செயலியில் சமர்ப்பிக்க முடிவது மற்றொரு முக்கியமான வசதி. காகிதப் பயன்பாடு குறைவதுடன், ஆசிரியர்களுக்கும் திருத்துவது எளிதாகிறது. சமர்ப்பித்த ஹோம்வொர்க், அசைன்மென்ட், செயல்முறைகளுக்கு ஆசிரியர்கள் உடனுக்குடன் கருத்துகள் மற்றும் மதிப்பெண்களையும் வழங்கமுடியும். இதனால் மாணவர்கள் தங்கள் தவறுகளை விரைவாக புரிந்துகொண்டு திருத்திக்கொள்ளமுடிகிறது. இந்த செயலி நேரப் பராமரிப்பையும் மேம்படுத்துகிறது. எந்த நாளில் எந்த வீட்டுப்பாடம் சமர்ப்பிக்க வேண்டும், தேர்வு எப்போது, எந்தப் பாடத்திற்கு என்ன வேலை உள்ளது போன்ற தகவல்கள் தெளிவாக கண்காணிக்கலாம். இதனால் மாணவர்கள் தங்கள் படிப்பை திட்டமிட்டு செய்ய முடிகிறது.

ஆசிரியர் மற்றும் மாணவர் இடையிலான தொடர்பையும் இந்த செயலி எளிதாக்குகிறது. சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் உடனடியாக கேட்கலாம். ஆசிரியர்களும் அறிவிப்புகளை உடனுக்குடன் பகிரமுடியும். பள்ளிக்கு வரமுடியாத சூழலிலும் பாடங்களை தவறவிடாமல் தொடர உதவுகிறது.

பெற்றோர்களுக்கும் இது மறைமுகமாக உதவுகிறது. குழந்தைகளின் படிப்பு முன்னேற்றம், வீட்டுப்பாடம், பள்ளி அறிவிப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளமுடிவதால், குழந்தையின் கல்வியில் பெற்றோர் ஈடுபாடு அதிகரிக்கிறது. மேலும் தொடக்கத்திலேயே குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தைக் கணக்கிட முடியும்.

மேலும் கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ், கூகுள் மீட் போன்ற பிற கூகுள் சேவைகளுடன் இணைந்து செயல்படுவதால், மாணவர்கள் ப்ராஜெக்ட் வேலைகள், குழு விவாதங்கள், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றையும் ஒரே தளத்தில் செய்யமுடிகிறது.