நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் முதல்வர் ஸ்டாலின்: பிரேமலதா பாராட்டு
திருப்பத்தூர்: நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் மக்கள் பிரச்னைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்த்து வருகிறார் என்று திருப்பத்தூரில் பிரேமலதா பாராட்டினார். திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி மெயின்ரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று `உங்களைத் தேடி இல்லம் நாடி’ மற்றும் விஜயகாந்த் ரத தேர் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறை, குறைகள் உள்ளது. இருப்பினும் பல சிறப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக செய்து வருகிறார். இவை பாராட்டுக்குரியது. மக்கள் பிரச்னைகளை அதிகளவில் அவர் தீர்த்து வைத்துள்ளார்.
மக்களுக்கான நல்ல திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. வரும் 2026 தேர்தலில் நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சியினர் வெற்றி பெறுவார்கள். அவர்கள்தான் முதல்வர் ஆவார்கள். எந்த கட்சியினராவது விஜயகாந்த் எங்களது குருநாதர் என தெரிவித்தால் அவர்கள் அந்த படத்தை உபயோகித்து கொள்ளலாம். அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.