Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நல்ல சிந்தனைகளை மனதில் விதைப்போம்!

கவலைகள் வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இளமைப் பருவத்தில் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னால் நன்றாக படிக்க முடியவில்லை என கவலைப்படும் இளைய உள்ளங்கள் உண்டு.நல்ல ஆடைகள் அணிய போதிய வசதி இல்லையே என்ற வருத்தத்தில் இருப்பவர்களும் உண்டு. நல்ல பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்குபவர்களும் உண்டு. இப்படி குடும்பம், ஊர், பள்ளி என பல நிலைகளில் கவலைகளை மனதை நிரப்பி, மகிழ்ச்சியை தொலைத்தவர்கள் உண்டு. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் கவலைப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் வந்து கொண்டு தான் இருக்கும்.சின்னஞ்சிறு வயதில் பென்சில், பேனா, ஆடை இவற்றிற்காக கவலைப்பட்டவர்கள். பள்ளிக்கு வந்ததும் படிப்பு, ஆசிரியர், பாடங்கள் என்பதைப் பற்றி கவலைப் படுகிறார்கள். கல்லூரிக்கு வந்ததும் பணம், காதல், படிப்பு என பல்வேறு திசையில் இருந்து வந்து கவலை உருவாக

ஆரம்பிக்கின்றது.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் நல்ல வேலை,நல்ல சம்பளம், நல்ல மனைவி என எதிர்பார்ப்பு ஏராளமாகி அவை நிறைவேறாத போது கவலைகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. அதன் பின்னர் பிள்ளைகள், தனி குடும்பம், வாரிசுகள் என கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வடிவத்தில் சின்னஞ்சிறு கவலைகள் ஒவ்வொருவர் மனதில் உருவாகத்தான் செய்யும். நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லையே, அவர் என்னை மரியாதையெல்லாம் நடத்துகிறார். அவருக்கு என் மீது அன்பு இல்லை, இப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் ஏன் தோன்றுகின்றது என்பதை உற்று கவனித்தால் ஒரு உண்மை நமக்கு புலப்படும்.நாம் பிறரிடம் ஏதேனும் ஒன்றைப் பற்றி சற்று அதிகமாகவே எதிர்பார்க்கிறோம். நாம் எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்வுகள் நிகழாவிட்டால் நமக்குள் ஏமாற்றம் வந்து விடுகிறது. அந்த ஏமாற்றம் சில வேலைகளில் விரக்தியாகவும், கோபமாகவும், பயமாகவும், எரிச்சலாகவும் வெளிப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் அது கவலையாக வடிவம் எடுத்து மனதின் ஓரமாக போய் ஒட்டிக் கொள்கிறது. நம் எதிர்பார்ப்புகளின்படி ஏதேனும் நடக்கவில்லை என்றால், முடிவில் கவலைகள் தான் அதிகமாகிறது.

பள்ளியில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கண்ணாடிக் குடுவைகளை வைத்து அறிவியல் தத்துவத்தை விளக்கினார்.அந்த கண்ணாடிக் குடுவையை வைத்தே வாழ்க்கை தத்துவத்தை விளக்க விரும்பினார். முதலில் அந்த கண்ணாடிக் குடுவையை கையில் எடுத்துக் கொண்டார். முன்வரிசையில் இருந்த மாணவனை அழைத்தார். ஆசிரியர் அருகே மாணவன் வந்ததும், அவனது வலது கையை நீட்ட சொன்னார். கையின் மீது கண்ணாடிக் குடுவையை வைத்தார்.பின்னர் கொஞ்சநேரம் அப்படியே நிற்கச் சொன்னார். மாணவன் தனது வலதுகையை நீட்டி கண்ணாடி குடுவையை தாங்கி பிடித்துக் கொண்டே நின்றான். ஒரு நிமிடத்திற்குப்பிறகு அந்த ஆசிரியர் மாணவனிடம் கேட்டார். இந்த கண்ணாடி குடுவையை கையில் வைத்துக் கொண்டிருப்பது உனது சுமையாக தோன்றுகின்றதா என்று கேட்டார் ஆசிரியர். சுமையாக இல்லை என்றான். ஐந்துநிமிடங்களுக்குப்பின் அதே கேள்வி கேட்டார். சுமையாக இல்லை என்றே பதில் தந்தான்.தொடர்ந்து 15 நிமிடங்கள் அப்படியே அவனை நிற்க வைத்தார். இப்போது கை மெதுவாக வலிக்கிறது என்றான் மாணவன். தொடர்ந்து அப்படியே நில் என்றார். 30 நிமிடங்கள் கழித்து மாணவனுக்கு கை அதிகமாக வலித்தது. 45 நிமிடங்கள் முடிவதற்குள் சார் நான் இப்போது இந்தக் குடுவையை கீழே வைக்கலாமா? என்றான். இல்லை இன்னும் கொஞ்ச நேரம் வைத்துக் கொள் என்றார் ஆசிரியர். சுமார் ஒரு மணி நேரம் முடிவதற்குள் கை அதிகமாக வலித்ததால் கண்ணாடிக் குடுவையை கீழே போட்டு விட்டான் மாணவன்.கண்ணாடி குடுவை உடைந்தது. உடைந்த கண்ணாடி குடுவையை அப்புறப்படுத்துவதிலேயே அந்த மாணவனின் கவனம் சென்றது.

இந்த நிகழ்ச்சியை பார்த்து பின் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஆசிரியர் கேட்டார். அதிக நேரம் கண்ணாடி குடுவையை கையில் வைத்திருந்தால் கை வலிக்கும்.கண்ணாடி குடுவை உடைந்து விடும் என்றார்கள். ஆசிரியர் தொடர்ந்து பேசினார் இதில் தான் வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறது.கண்ணாடி குடுவையை கையில் வைத்திருப்பது போல ஒரு கவலை தரும் நிகழ்வை நாம் மனதில் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் பிரச்னையில்லை. நமது மனம் தாங்கிக் கொள்ளும். ஆனால் சின்ன பிரச்னையைக்கூட தொடர்ந்து பல நாட்கள் வைத்திருந்தால் நமது மனம் தாங்கிக் கொள்ளாது. கவலைகளால் நமது மனம் வலிக்கும். கவலை கொண்ட மனம் நமது வாழ்க்கைப் பாதையை மாற்றி நமது வளர்ச்சியை கெடுத்து விடும் என்றார் ஆசிரியர். கவலைதரும் பிரச்னைகள் சிறிதாக தோன்றும்போதே அதை நீக்குவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். சின்ன,சின்ன பிரச்னைகளை மனதில் தேக்கி வைத்து கவலைகளை வளர்த்துக் கொண்டால்,வாழ்க்கையின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கும். எனவே கவலைகளை மறப்போம், எப்போதும் வெற்றி தரும் நல்ல சிந்தனைகளை மனதில் விதைப்போம்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.

அசைக்க முடியாத மன உறுதிக்கு மிக சிறந்த சான்று திவ்யா. இளம் வயதிலேயே தந்தையை இழந்த திவ்யா, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். திவ்யாவின் தாய் விவசாயக் கூலி வேலை செய்து, குடும்பத்தை தனியாகப் பராமரித்தார், பொருளாதாரத்தில் பின்தங்கிய போதும்,தனது மகளுக்கு சிறப்பான கல்வியை தர வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார்.யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர் அரசு அதிகாரியாக வேண்டும் என்ற தனது மகளின் கனவை நிஜமாக்க பாடுபட்டார். திவ்யா தன்வார் 2021 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 438வது அகில இந்திய ரேங்க் பெற்றார். எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் யார் உதவியின்றி, தினமும் பத்து மணிநேரம் சுயமாக படித்து, தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சாதனை புரிந்து உள்ளார் திவ்யா.

ஐ.பி.எஸ் பணி கிடைத்த போதும் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று,2022 ஆம் ஆண்டு தனது 22 வயதில் மீண்டும் யு.பி.எஸ்.சி,தேர்வில் தேர்ச்சி பெற்றபோது அவரது விடாமுயற்சியில்,105வது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் பணியை பெற்றார். திவ்யாவின் ஆரம்பக்கல்வியை அரசு பள்ளியில் படித்தார். இளம் வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கினார் திவ்யா, உள்ளூர் அரசுப் பள்ளிகளில் தொடங்கி பள்ளி கல்வி, நவோதயா வித்யாலயாவில் அவரது கல்விப் பயணம் தொடர்ந்தது, அங்கு அவர் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். அறிவியல் பட்டம் பெற்ற திவ்யா, பட்டம் பெற்ற உடனேயே தனது யுபிஎஸ்சி தேர்வுக்கு சுயமாக பயிற்சிகளை தொடங்கினார்.அவரது தாயார் பபிதாவின் ஆதரவு, அவரது முயற்சியில் மிக முக்கிய பங்கு ஆகும்.

தற்போது ஐ.ஏ.எஸ்.திவ்யா தன்வார் சமூக ஊடக தளங்களில் தனது ஊக்கமூட்டும் கதையை பகிர்ந்து கொண்டு உள்ளார்.அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 90,000 க்கும் அதிகமானோராக உள்ளார்கள்.அவரது வாழ்க்கை மற்றவர்களை ஊக்குவிக்கும் மனஉறுதியை ஏற்படுத்துகிறது என்றால் மிகையாகாது.திவ்யா தன்வாரின் பயணம் இன்றைய இளம் பெண்களுக்கு உணர்த்துவது என்னவென்றால், நல்ல சிந்தனைகளை மனதில் இடம் பெறச் செய்து, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவையுடன் செயல்பட்டால் சவாலான சூழ்நிலைகளைக் கூட சமாளித்து சாதிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.