Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு எதிரொலி: விளையாட்டு வீரர்கள், பட்டமளிப்பு விழாவுக்கு மாற்று உலோக பதக்கங்கள் வழங்க திட்டம்; தயாரிப்பு செலவு 4 முதல் 5 மடங்கு வரை அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேசிய விளையாட்டு வீரர்கள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் மாற்று உலோகங்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை நிர்வாகிகள், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கங்களுக்கும் தயாரிப்பு செலவினங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒன்றிய, மாநில விளையாட்டு அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் பதக்க வழங்கும் முறைகளில் மாற்று வழிகளை பரிசீலித்து வருகின்றன. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் வழங்கப்படும் தங்கப் பதக்கங்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் தங்கப் பதக்கங்கள் கல்விச் சிறப்பின் அடையாளமாக வழங்கப்படுகின்றன. இவ்விரு துறைகளிலும் பதக்கங்கள் பெரும் கவுரவச் சின்னமாக கருதப்படுவதால், தங்க பதக்கத்தின் செலவு உயர்வு நிர்வாகங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தங்கப் பதக்கங்களின் தயாரிப்பு செலவு 4 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. பெரும்பாலான தங்கப் பதக்கங்கள் முழு தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. வெள்ளி அடிப்படையில் தயாரித்து, அதன் மேல் 24 காரட் தங்கம் பூசப்பட்ட பதக்கங்களே தேசிய விளையாட்டு போட்டிகளிலும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, கைவினை கூலி, வடிவமைப்பு செலவு, போக்குவரத்து செலவு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் மொத்த செலவு கடுமையாக அதிகரித்துள்ளதாக நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டிலும் பல பிரிவுகள் இடம்பெறுவதால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டுகளின் எண்ணிக்கையும், வீரர்களின் பங்கேற்பும் அதிகரிப்பதால், பதக்கங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சில போட்டிகளில், பதக்கத்தின் எடையை குறைப்பது அல்லது மாற்று உலோக அடிப்படையுடன் தங்கப் பூச்சு செய்யப்பட்ட பதக்கங்களை பயன்படுத்துவது போன்ற மாற்று வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் முதல் நிலை, துறைகளில் முதலிடம் போன்ற தங்கப் பதக்கம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. சில பெரிய பல்கலைக்கழகங்களில் ஒரே விழாவில் 200 முதல் 300 வரை தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் விழா செலவுகளில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், சில பல்கலைக்கழகங்களில் பதக்கங்கள் தயாரிப்பதற்கான டெண்டர்களுக்கு முன்பு 68 நிறுவனங்கள் முன்வந்த நிலையில், தற்போது 2 முதல் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெண்டர்கள் மீண்டும் வெளியிடப்படுவது, விழா ஏற்பாடுகள் தாமதமாவது போன்ற சிக்கல்கள் உருவாகியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தேசிய விளையாட்டு வீரர்களின் சாதனையும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் சிறப்பும் பதக்கங்களின் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. அதில் தரம் அல்லது மரியாதையில் எந்த சமரசமும் செய்ய முடியாது. இருப்பினும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தால், எதிர்காலத்தில் மாற்று உலோகங்கள், குறைந்த எடை கொண்ட உயர்தர பதக்கங்கள் அல்லது சிறப்பு நினைவுச் சின்னங்களுடன் கூடிய பதக்கங்கள் போன்ற புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலை உருவாகலாம். மேலும், பதக்கங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு, ஸ்பான்சர் ஆதரவுடன் தயாரிப்பு, மற்றும் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் பதக்க தயாரிப்பு போன்ற தீர்வுகளும் பரிசீலனையில் உள்ளன. இதன் மூலம், தேசிய விளையாட்டு வீரர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்கப்படும் மரியாதை குறையாமல், கல்வி மற்றும் விளையாட்டு நிறுவனங்களின் நிதிச்சுமையை சமநிலைப்படுத்த முடியும். இவ்வாறு கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கல்வி மற்றும் விளையாட்டு துறை வட்டாரங்களின் வீரர்கள், மாணவர்களுக்கு

வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் செலவின் மதிப்பீடுகள் (தோராயமாக)

விவரங்கள் கடந்தாண்டு (சராசரி) தற்போதைய நிலை

தங்கப்பதக்கத்தின்

சராசரி தயாரிப்பு செலவு ரூ.8,000-ரூ.10,000 ரூ.35,000-ரூ.45,000

வெள்ளி அடிப்படை

பதக்க செலவு ரூ.3,500-ரூ.4,500, ரூ.7,000-ரூ.9,000

தேசிய விளையாட்டு போட்டி

களில் வழங்கப்படும் தங்கப்

பதக்கங்கள் 150 முதல் 200 200 முதல் 250

பெரிய பல்கலைக்கழக

பட்டமளிப்பு விழாவில்

தங்கப்பதக்கங்கள் 120 முதல் 150 200 முதல் 300

ஒரு நிகழ்வுக்கான

மொத்த பதக்க செலவு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம், ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சம் வரை

டெண்டரில் பங்கேற்கும்

நிறுவனங்கள் 6 முதல் 8 வரை 2 முதல் 3 நிறுவனங்கள் பங்கேற்பு