Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடரட்டும் பொற்காலம்

இந்தி திணிப்பு என்ற வைரசை, அண்ணா காலம் தொட்டு திமுக எதிர்த்து போராடி வருகிறது. இந்தி திணிப்பு என்ற அஸ்திரத்தை ஒன்றிய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளும்போது திமுக அதை துணிந்து எதிர்த்து போராடியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா போன்ற கட்சிகள் கூட பாராட்டும் அளவுக்கு இந்தி எதிர்ப்பில் திமுக தனது பங்களிப்பை செய்து வருகிறது. சமீபத்தில் தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதும் முதல் ஆளாக களம் இறங்கியது திமுகதான்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்த மறுசீரமைப்பில் பாதிப்புக்குள்ளாகும் கேரளம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களையும் கைகோர்த்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் எழுப்பினார். மக்கள் தொகை பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என சாதகமாக மாற்றிய தமிழ்நாட்டிற்கு இப்படியொரு தண்டனையா என அவர் எழுப்பிய கேள்வி ஒன்றிய அரசையே உலுக்கியது. மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகையை காரணம் காட்டி தொகுதிகளை குறைத்தால், இந்தியாவின் மக்கள் தொகை வருங்காலங்களில் பன்மடங்கு பெருகவே வழிவகுக்கும்.

நீட் தேர்வு என்னும் அரக்கன் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்கவே இல்லை. அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. பதவியை காப்பாற்ற, அதிமுக தலைவர்கள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக அப்போது மாறி போனார்கள். ஆரியத்திற்கு முந்தைய பண்பாடாக காட்சியளிக்கும் திராவிடத்தை ஆய்வு பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நிலை நாட்ட இப்போது திமுக முயற்சி எடுத்து வருகிறது. அதற்காக சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களை புரிந்து கொள்ள வழிவகை செய்வோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகையையும் முதல்வர் அறிவித்தார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்போது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகவும் உள்ளது. ரூ.10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கி நகர்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்று, தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை மாற்றவும், போதை பொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக ஒரு பச்சையான பாஜககாரராக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவி அரசு ஏற்றிய சட்டங்களை முடக்கியபோது, அதையும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று தமிழ்நாட்டின் உரிமையை முதல்வர் நிலைநாட்டியுள்ளார். ஒரு தபால்காரரின் பணியை மட்டுமே கவர்னர் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது அதிகாரத்தை வரையறுத்ததும் தமிழ்நாடுதான்.

இந்நிலையில் வெறுப்பு அரசியலை விதைத்து வரும் ஒன்றிய அரசு, தனது கடந்த கால கைப்பாவையான அதிமுகவோடு மீண்டும் கூட்டணி வைத்து கொண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற கோஷத்தை முன்வைக்கிறது. அதிமுக-பாஜ கூட்டணி தமிழகத்தில் ஏற்கனவே இருமுறை தொடர்ச்சியாக தோல்வி அடைந்த கூட்டணிதான்.

ஒரு மாறுதலுக்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருவரும் தனித்தனியே நிற்பது போல் கள்ள கூட்டணி அமைத்து கொண்டு தேர்தலை சந்தித்தனர். அப்போது தோல்வியே கிட்டியது. வாக்காளர்கள் திமுக தலைமையிலான பொற்கால ஆட்சி தொடரட்டும் என்கிற மனநிலையில் இருக்கும்போது, பாஜவின் ஜம்பம் தமிழகத்தில் ஒரு போதும் பலிக்காது.