தங்கம் விலை தொடர்ந்து அதிரடி மாற்றம் 3 நாளில் பவுனுக்கு ரூ.22,800 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.1.25 லட்சம் சரிவு
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.22,800 குறைந்துள்ளது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.1.25 லட்சம் சரிந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது.
அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது. இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் விலை எட்டா கனியாகி விடுமோ என்ற அச்சமும் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடையே நிலவி வந்தது. இந்த தொடர் விலையேற்றத்தால் நகை கடைகளில் விற்பனையும் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி அன்று தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,800க்கு விற்பனையானது.
மேலும் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 31ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,200க்கு விற்பனையானது. அன்றைய தினம் வெள்ளி விலை காலை, மாலை என கிலோவுக்கு ரூ.85 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.3.20 லட்சத்துக்கு விற்பனையானது. நேற்று முன்தினம் (1ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளில் தங்கத்தில் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.
அதாவது, தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனையானது. அதே நேரத்தில் கடந்த 30ம் தேதி, 31ம் தேதி, 1ம் தேதி (தங்கம் மார்க்கெட் விடுமுறை), தொடர்ந்து நேற்று என 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22,800 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் குறைந்துள்ளது.
இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘‘அமெரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய தலைவராக டிரம்ப் தனக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர் கெவின் வார்ஷின்-ஐ பரிந்துரைத்துள்ளார். டிரம்ப் ஆதரவாளரான கெவின் வார்ஷ், டாலர் மதிப்பை உயர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல், தங்கம், வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், அதன் மூலமான லாபத்தை உறுதி செய்வதற்காக முதலீட்டாளர்கள் அவற்றை சிறிதளவு விற்க தொடங்கியதும் விலை குறைவுக்கு காரணமாகும்” என்றனர்.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்க இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு தங்கம் விலை ஏற்றம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக தெரிவியவில்லை. அதேநேரத்தில் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையால் தற்போது தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைத்து இருந்தால் இன்னும் தங்கம் விலை குறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

