Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வார இறுதி நாளில் காலை, மாலை அதிரடி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.1440 குறைந்தது; வெள்ளியும் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது

சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என அதிரடியாக பவுனுக்கு ரூ.1440 குறைந்தது. இதே போல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிந்தது. தங்கத்தின் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் கடந்த 29ம் தேதி அன்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. தொடர்ந்து மறுநாள்(நேற்று முன்தினம்) எந்த அளவுக்கு குறைந்ததோ? அதே அளவுக்கு உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து, பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800க்கும் விற்பனையானது.

இந்நிலையில் வாரம் இறுதிநாளான நேற்று தங்கம் விலை மீண்டும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,050க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,400க்கும் விற்பனையானது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் நேற்று காலையில் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று மாலையும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது.

மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,920க்கும், பவுனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11, 360 குறைந்தது. இதன் மூலம் வெள்ளி விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1440 குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் மாலையில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.