சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாளில் பவுனுக்கு ரூ.1240 உயர்ந்தது. பவுன் மீண்டும் 73 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்வதுமான போக்கும் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160க்கும் விற்பனையானது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விலை உயர்வு அதிர்ச்சியை நகை வாங்குவோர் தாங்குவதற்குள் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,800க்கு விற்பனையானது. 2 நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.1,240 உயர்ந்துள்ளது. மீண்டும் தங்கம் விலை பவுன் ரூ.73 ஆயிரத்தை நெருங்கியுள்ளது நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது.
