மீண்டும் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,280 குறைந்தது: போட்டிப்போட்டு வெள்ளி விலையும் சரிந்தது
சென்னை: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.1280 குறைந்தது. இதேபோல வெள்ளியும் போட்டி போட்டு சரிவை சந்தித்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதியில் இருந்து தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர தொடங்கியது. அன்றைய தினம் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.91,840க்கும் விற்றது. 11ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.93,600க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் மட்டும் காலை, மாலை என பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.95,200க்கு விற்றது. விலை உயர்வு பண்டிகை காலங்களில் நகை வாங்க காத்திருந்து வருபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இப்படி தான் தீபாவளி நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை தினம், தினம் அதிரடியாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை கண்டது. அதாவது கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,840க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.94,720க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் நேற்று காலையில் வெள்ளி விலையும் குறைந்திருந்தது. நேற்று காலையில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180க்கும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்றது. தொடர்ந்து மாலையிலும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11740க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.93,920க்கும் விற்க்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
