தங்கம் விலை காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2400 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் எகிறியது
சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (1ம் தேதி) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100, பவுனுக்கு ரூ.800ம் குறைந்திருந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7200க்கும் விற்பனையானது.
அதே போல வெள்ளி விலையும் நேற்று காலை அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று மாலையும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மாலையில் தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,400க்கு விற்பனையானது.
இதே போல மாலையில் வெள்ளி விலையும் உயர்ந்தது. மாலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கு விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2400 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


