சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,030க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் 1 லட்சத்து 20,240 ரூபாய்க்கும் விற்றது. அதே நேரத்தில் கடந்த 15ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,480 உயர்ந்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.
நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 20 ஆயிரத்து 80க்கும் விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று குறைந்தது. அந்த வகையில், நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி 2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.




