சென்னை: தங்கம் விலை நேற்று மீண்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2560 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த 29ம் தேதி பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி முதல் நேற்று முன்தினம் (1ம் தேதி) வரை பவுனுக்கு ரூ.22,800 குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை குறைந்தது.
இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்தது. இன்னும் விலை குறையும் என்று நகை வாங்குவோர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12240க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து பார் வெள்ளி ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும், பவுனுக்கு ரூ.1,920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கு விற்பனையானது.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்தது. தங்கம் விலை அதிகரித்தது நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மாலையில் வெள்ளி விலை அதிகரித்தது. மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.30க்கும், கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.


