சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்துள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதலே ஆபரண தங்கத்தின் விலை லட்சத்தை எட்டியது. இதற்கு காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உலக நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றங்கள், உலக அளவிலான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்ததாக பொருளாதார வல்லுநர்களால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கடந்த மாதம் உச்சத்தில் இருந்த தங்க விலையை கண்டு நகைவாங்குவோர் அதிர்ச்சியில் உறைந்துப்போயினர்.
குறிப்பாக, இதுவரை தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாதபடி கடந்த 29ம் தேதி ஒரு சவரன் ரூ.1.34 லட்சத்தை எட்டியது. மேலும், தங்கம் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், கடந்த 3 நாட்களாக (விடுமுறை தவிர்த்து) தங்கத்தின் மீதான விலை கணிசமாக குறைந்து வந்தது. குறிப்பாக, கடந்த 30ம் தேதி சவரனுக்கு ரூ.7,600, ஜன.31ம் தேதி சவரனுக்கு ரூ.7,600 சரிந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு மீண்டும் இந்தவார தொடக்க நாளான நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.7,600 என 3 நாட்களில் மட்டும் ரூ.22,800 வரை தங்கம் விலை குறைந்தது.
இந்நிலையில் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.1,920 உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை காலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் பிற்பகல் ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்திருந்த நிலையில் பிற்பகலில் ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

