Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தங்கம் விலை கிடு கிடு… என்ன செய்யலாம்?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகும் போது பொதுவாக எல்லோருக்கும் வரும் கேள்வி இதுதான் - “இப்போ வாங்கலாமா? காத்திருக்கலாமா?” உண்மையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு உலக பொருளாதார நிலை, டாலர் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள், போர் பதற்றங்கள், பணவீக்கம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அதனால் “இனி கண்டிப்பாக குறையும்” அல்லது “இன்னும் ஏறும்” என்று யாராலும் துல்லியமாக சொல்ல முடியாது. ஆனால் தங்கம் வாங்க, விற்க நினைப்போர் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

தங்கம் வாங்க சில ஆலோசனைகள்

* திருமணம் அல்லது அவசர தேவைக்காக தங்கம் வாங்க வேண்டிய நிலை என்றால், ஒரே முறையில் முழு தொகையும் கொடுத்து வாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது பாதுகாப்பான அணுகுமுறை. விலை ஏறினாலும் சராசரி விலை சமநிலையாகும்.

*முதலீட்டுக்காக வாங்குகிறீர்கள் என்றால், நகை வாங்குவதற்குப் பதிலாக கோல்ட் ETF, சவரன் தங்கப் பத்திரம் (Gold ETF, Sovereign Gold Bond) போன்ற வழிகளையும் பரிசீலிக்கலாம். செய்கூலி, சேதாரம் போன்ற இழப்புகள் இருக்காது.

*“விலை இன்னும் ஏறும்” என்ற பயத்தில் அவசரமாக கடன் எடுத்து தங்கம் வாங்குவது ஆபத்து. தங்கம் பாதுகாப்பான சொத்து தான்; ஆனால் நிலையான மதிப்பில் இருக்காது.

*வீட்டில் பழைய நகைகள் இருந்தால், இப்போதைய உயர்ந்த விலையை பயன்படுத்தி புதிதாக மாற்றம் அல்லது டிசைன்கள் மாற்றம் செய்யும் வாய்ப்பும் நல்லதாக இருக்கும்.

*ஒருவரின் முழு சேமிப்பும் தங்கத்தில் மட்டும் இருக்கக் கூடாது. நிலம், நிலையான வைப்புத்தொகை, பரஸ்பர நிதி, அவசரகால சேமிப்பு போன்றவற்றோடும் சமநிலையாக சேமிப்பு வைத்திருப்பது நல்லது.

தங்கத்தில் முதலீடு செய்ய இன்று பல நவீன வழிகள் வந்துவிட்டன. அதில் அதிகம் பேசப்படுவது தான் கோல்ட் ETF, (Gold ETF- An Exchange-Traded Fund) மற்றும் சவரன் தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond (SGB). இரண்டுமே நேரடியாக தங்கம் வாங்காமல் தங்கத்தின் மதிப்பில் முதலீடு செய்ய உதவும் வழிகள். ஆனால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

தங்கம் ETF (Gold ETF) என்றால் என்ன?

Gold ETF என்பது “Exchange Traded Fund”. எளிமையாக சொன்னால், இது பங்குச்சந்தையில் வாங்கப்படும் டிஜிட்டல் தங்கம்.

நீங்கள் ஒரு Gold ETF வாங்கினால், அதன் பின்னால் உண்மையான தங்கத்தின் மதிப்பு இருக்கும். தங்கம் விலை ஏறினால் உங்கள் ETF மதிப்பும் உயரும்; குறைந்தால் குறையும்.

இதனை வாங்குவதற்கு டிமேட் கணக்கு (Demat account) மற்றும் வர்த்தகக் கணக்கு (Trading account) தேவைப்படும். பங்குகளை வாங்குவது போலவே NSE அல்லது BSE-யில் வாங்கலாம்.

இதன் பயன்கள்

*நகை செய்கூலி இல்லை.

*பாதுகாப்பாக லாக்கரில் வைத்து அதற்கு செலவிட வேண்டிய அவசியம் இல்லை.

*எப்போது வேண்டுமானாலும் மார்க்கெட்டில் விற்கலாம்.

*சிறிய தொகையிலிருந்தே முதலீடு செய்யலாம்.

*வீட்டில் அதிக அளவு தங்கம் அதற்கான பயம் இருக்காது.

ஆனால் இதில் வட்டி கிடையாது. முழுக்க முழுக்க தங்க விலை உயர்வில்தான் லாபம் இருக்கும்.

சவரன் தங்க பத்திரம் (Sovereign Gold Bond (SGB)) என்றால் என்ன?

தங்கப் பத்திரம் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் பத்திரம்.

இதிலும் நேரடி தங்கம் கிடையாது. ஆனால் நீங்கள் வாங்கும் பத்திரம் தங்கத்தின் மதிப்புடன் இணைந்திருக்கும். இதன் சிறப்பு தங்க விலை உயர்வுடன் சேர்த்து வருடத்திற்கு கூடுதலாக வட்டியும் கிடைக்கும்.

பொதுவாக வருடத்திற்கு 2.5% வட்டி வழங்கப்படும். இது வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகும்.

இதன் முக்கிய அம்சங்கள்

*இந்திய அரசு சார் சேமிப்பு என்பதால் பதுகாப்பு உறுதி.

*தங்க விலை உயர்வின் பலன் கிடைக்கும்.

*கூடுதலாக வட்டி கிடைக்கும்.

*8 ஆண்டுகள் வரை வைத்திருந்தால் முதிர்வில் வரிச்சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தங்கப் பத்திரத்தை நீண்ட கால முதலீடாகப் பார்ப்பது நல்லது. மார்க்கெட்டில் விற்கலாம் என்றாலும் வருவாய் சில நேரங்களில் குறைவாக இருக்கலாம்.

எது நல்லது?

*அடிக்கடி வாங்கி விற்க நினைத்தால் Gold ETF வசதியானது.

*நீண்ட காலம் வைத்திருக்கவும் interest வேண்டும் என்றால் SGB நல்ல பலன் கொடுக்கும்.

*நகை அணிவதற்காக வாங்குவது மற்றும் முதலீட்டுக்காக வாங்குவது இரண்டையும் தனியாகப் பார்க்க வேண்டும்.

*அதிக டிசைன்கள், வேலைப்பாடுகள், கற்கள் உள்ள நகைகளை தவிர்த்து நகைகளை தேர்வு செய்யுங்கள்.

*ஒரே நேரத்தில் அதிக தங்கம் வாங்குவது கூடாது.

*ஒரு கடையை நம்பாமல் பல்வேறு கடைகளின் செய்கூலி, சேதார மதிப்புகளை ஒப்பிடுங்கள்.

*எந்தக் கடையில் தங்கம் வாங்குகிறீர்களோ அந்த கடையில் மீண்டும் மாற்றினால் நல்ல விலை பெறலாம்.

*திருமண நகைகளை கடைகள் மாற்றி வாங்க முயற்சியுங்கள். குடும்பக் கடை என ஒரு தங்க நகைக் கடையில் நிலையாக இருக்காதீர்கள்.

*வசதி இருப்பின் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களைத் தவிர்த்து ஊர்ப்புறங்களில் நகைகள் வாங்க விலை சிறிது வித்யாசப்படும். பெருந்தொகைக்கு நகை வாங்கும் போது அது பயன் தரும்.

*நகைகளை வாங்கி பல வருடங்களாக அப்படியே வைப்பதற்கு காசுகளாக வாங்கி சேமிக்கலாம். செய்கூலி, சேதாரங்கள் முற்றிலுமாக இருக்காது.

- ஷாலினி நியூட்டன்.