Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரு கோல்... ஒரு தங்கம்... ஒரு வரலாறு!

2026 அக்டோபர் 2ஆம் தேதி ஜப்பானின் ககாமிகஹாராவில் நடைபெற்ற மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. சீனா கடந்த முறை சாம்பியன் என்பதும், பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டுத் தங்கத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில்தான் இந்தியா மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. இதுவே இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இரண்டாவது ஆசிய விளையாட்டுத் தங்கமாக வரலாறு படைத்துத் திரும்பியிருக்கிறார்கள். நம் சிங்கப் பெண்கள். யார் இவர்கள் ஒரு ஸ்வீட்,

ஷாட் பயோடேட்டா.

சலிமா டெட்டே - கேப்டன்

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பர்கி சாப்பர் கிராமம் சலிமாவின் சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சுலக்ஷன் டெட்டேவும் ஹாக்கி விளையாடியவர். சிறு வயதிலிருந்தே

தந்தையைப் பார்த்து ஹாக்கி

விளையாடத் தொடங்கினார்.

மூங்கில் குச்சியை ஹாக்கி மட்டையாக வைத்து விளையாடிய நாட்களில் இருந்து இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். 2024 முதல் இந்திய மகளிர் அணிக்கு கேப்டனாக உள்ளார். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியிஅவரே அணியை வழிநடத்தினார்.

கேப்டனாக அவரது பங்கு: இறுதிப்போட்டியில் இந்தியாவின் முதல் கோல் உருவாக சலிமாவின் ஓட்டம்தான் தொடக்கமாக இருந்தது. அவர் பந்தை எடுத்துக்கொண்டு முன்னேறி சாக்ஷி ராணாவிடம் கொடுத்தார்; சாக்ஷி அதை லால்ரெம்சியாமியிடம் கொடுக்க, அவர் கோல் அடித்தார். அரையிறுதியில் தென் கொரியாவுக்கு எதிராக சலிமாவே ஒரு கோல் அடித்திருந்தார். இறுதிப்போட்டியின் கடைசி நேரங்களில் சீனாவின் தாக்குதலைத் தடுக்கவும் அவர்

முக்கியமாகச் செயல்பட்டார்.

சவிதா புனியா - கோல் கீப்பர்

ஹரியானாவின் சிர்சா பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே ஹாக்கியில் ஆர்வம் கொண்டார். குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

பல ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிக்கையான கோல் கீப்பராக இருக்கிறார். இந்த இறுதிப்போட்டியில் சீனா பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பைப் பெற்றபோது, சவிதா அதைத் தடுத்து இந்தியாவின் 1-0 முன்னிலையை காப்பாற்றினார். இந்த சேவ் வெற்றியில் மிக முக்கியமான தருணமாக அமைந்தது.

பிச்சு தேவி கரிபாம் - கோல் கீப்பர்

மணிப்பூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் கால்பந்து விளையாட வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் கால்பந்து தேர்வில் இடம் கிடைக்காததால் ஹாக்கி தேர்வுக்குச் சென்றார்.

அங்கிருந்து அவரது வாழ்க்கையே மாறியது. மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமியில் பயிற்சி பெற்றார். இன்று இந்திய அணியின் இரண்டாவது முக்கிய கோல் கீப்பராக இருக்கிறார்.

சுஷிலா சானு - தடுப்பாட்ட வீராங்கனை

மணிப்பூரின் இம்பால் பகுதியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஓட்டுநராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தனர்.

சிறு வயதிலேயே ஹாக்கியைத் தொடங்கினார். பின்னர் மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமியில் பயிற்சி பெற்றார். இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவராக உள்ளார்.

இஷிகா சௌத்ரி - தடுப்பாட்ட வீராங்கனை

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்தவர். 11 வயதில் ஹாக்கி விளை

யாடத் தொடங்கினார்.

அவரது தந்தை ராஜீவ் சௌத்ரி ஆசிரியர். மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமியில் பயிற்சி பெற்று இந்திய அணிக்கு வந்தவர்.

ஜோதி - தடுப்பாட்ட வீராங்கனை

ஒடிசாவின் ரூர்கேலா பகுதியுடன் தொடர்புடையவர். குடும்பத்தில் இருந்தே ஹாக்கி அறிமுகமானது. அவரது மூத்த சகோதரர் சூரஜ் ஹாக்கி கோல் கீப்பராக இருந்தார். அவரைப் பார்த்துதான் ஜோதி ஹாக்கி கற்றுக்கொண்டார்.

பொருளாதார வசதி அதிகம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தாலும், விளையாட்டு விடுதி மற்றும் பயிற்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறினார்.

லால்தந்த்லுவாங்கி - தடுப்பாட்ட வீராங்கனை

மிசோரத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை. பள்ளிப் பருவத்திலேயே

ஹாக்கியைத் தொடங்கினார்.

பயிற்சியாளர்கள் அவரது திறமையை கவனித்து தொடர்ந்து பயிற்சி அளித்தனர். 2026ல் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார்.

ஷில்பி தபாஸ் - தடுப்பாட்ட வீராங்கனை

ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்தவர். இவருக்கு ஹாக்கி குடும்பப் பின்னணி உண்டு.

தந்தை அனில் தபாஸ் ஹாக்கி விளையாடியவர். தாயும் தேசிய அளவில் ஹாக்கி விளையாடியவர். பெற்றோரின் வழியில் ஷில்பியும் ஹாக்கியைத்

தேர்ந்தெடுத்தார்.

நிக்கி பிரதான் - நடுகள வீராங்கனை

ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

சிறு வயதிலேயே ஹாக்கி பயிற்சியைத் தொடங்கினார். ராஞ்சியில் உள்ள ஹாக்கி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய அணிக்கு வந்தார். இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நடுகள வீராங்கனை களில் ஒருவர்.

சாக்ஷி ராணா - நடுகள வீராங்கனை

ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் வேறு விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தாலும், பின்னர் ஹாக்கியைத் தேர்ந்தெடுத்தார்.

அவரது குடும்பம் அவரை ஊக்கப்

படுத்தியது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் முதல் கோலுக்கு சாக்ஷி ராணாவின் பங்களிப்பு முக்கியமானது. சலிமா கொடுத்த பந்தை லால்ரெம்சியாமியிடம் கொடுத்தார்; அதிலிருந்துதான் கோல் வந்தது.

சுனெலிதா டொப்போ - நடுகள வீராங்கனை

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

சிறு வயதிலேயே ஹாக்கி விளையாடத் தொடங்கினார். குடும்பத்தின் பொருளாதார நிலை சாதாரணமாக இருந்தாலும், பெற்றோர் அவரை விளையாட்டில் தொடர்ந்து செல்ல ஊக்கப்படுத்தினர்.

நேஹா - நடுகள வீராங்கனை

ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்தவர். மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர்.

அவரது தாய் குடும்பத்தை நடத்துவதற்காக பல்வேறு வேலைகள் செய்தார். சிறு வயதிலேயே ஹாக்கியைத் தொடங்கிய நேஹா, பயிற்சியாளர்களின் உதவியுடன் முன்னேறி இந்திய அணியில் இடம்பிடித்தார்.

தீபிகா சோரெங் - நடுகள வீராங்கனை

ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தில் ஏற்பட்ட சிரமங்களைக் கடந்து ஹாக்கியில் முன்னேறியவர்.

அவரது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். தாய் குடும்பத்துக்காக கடினமாக உழைத்தார். அந்தச் சூழ்நிலையிலும் தீபிகா ஹாக்கியில் கவனம் செலுத்தி இந்திய அணிக்கு வந்தார்.

பால்ஜீத் கவுர் - முன்னணி வீராங்கனை

பஞ்சாபைச் சேர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதே ஹாக்கி விளையாடத் தொடங்கினார்.

அவரது தந்தை கட்டிடத் தொழிலாளி. குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக ஆரம்பத்தில் ஹாக்கி மட்டை, காலணி போன்றவற்றை வாங்குவதிலும் சிரமம் இருந்தது. ஆனாலும் குடும்பத்தின் ஆதரவுடன் தொடர்ந்து விளையாடி இந்தியஅணிக்கு வந்தார்.

பியூட்டி டுங்டுங் - முன்னணி வீராங்கனை

ஜார்க்கண்டின் சிம்டேகா பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்பமே ஹாக்கி குடும்பம்.

தந்தை அம்ப்ரோஸ் டுங்டுங் தேசிய அளவில் ஹாக்கி விளையாடியவர். தாத்தாவும் ஹாக்கிவீரர். சகோதரர்களும் ஹாக்கி விளையாடியுள்ளனர். அதனால் சிறு வயதிலிருந்தே ஹாக்கி இவரது குடும்ப வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது.

தீபிகா - முன்னணி வீராங்கனை

ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் ஹாக்கி விளையாட்டால் ஈர்க்கப்பட்டார்.

தந்தை ஜகதீஷ் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். குடும்பத்தின் ஆதரவுடன் ஹாக்கியில் கவனம் செலுத்தி இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இஷிகா - முன்னணி வீராங்கனை

ஹரியானாவின் பிவானியைச் சேர்ந்தவர். ஹாக்கி பின்னணி கொண்ட

குடும்பத்தில் வளர்ந்தவர்.

அவரது தந்தை விரேந்தர் குமார் ஹாக்கி பயிற்சியாளர். சிறு வயதிலிருந்தே மைதானத்துக்குச் சென்று ஹாக்கியைப் பார்த்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

லால்ரெம்சியாமி - முன்னணி வீராங்கனை

மிசோரத்தின் கொலாசிப் பகுதியைச் சேர்ந்தவர். விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர்.

தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர்; பின்னர் விவசாயம் செய்தார். 11 வயதிலேயே ஹாக்கி பயிற்சியைத் தொடங்கினார்.

இந்த இறுதிப்போட்டியின் கதாநாயகிகளில் ஒருவர். 10வது நிமிடத்தில் சாக்ஷி ராணாவிடமிருந்து பந்தைப் பெற்று அழகான ரிவர்ஸ்-ஸ்டிக் ஷாட் மூலம் கோல் அடித்தார். அது அவரது 200வது சர்வதேச போட்டி என்பதும் கூடுதல் சிறப்பு. அந்த ஒரு கோல்தான் இந்தியாவுக்கு தங்கத்தைத் தேடித்தந்தது.

நவ்நீத் கவுர் - முன்னணி வீராங்கனை

ஹரியானாவின் ஷஹாபாத் மார்கண்டாவைச் சேர்ந்தவர். அந்தப் பகுதி ஹாக்கிக்குப் பெயர் பெற்றது.

ஆரம்பத்தில் குடும்பத்தில் கிரிக்கெட்டின் மீதுதான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் ஷஹாபாத்தின் ஹாக்கி சூழல் நவ்நீத்தை ஹாக்கி பக்கம் அழைத்துச் சென்றது. பின்னர் இந்திய அணியின் முக்கியமான முன்னணி வீராங்கனையாக உயர்ந்தார்.

ருதாஜா தாதாசோ பிசால் - முன்னணி வீராங்கனை

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளியில் முதலில் கோ-கோ விளையாடினார்.

அவரது ஓட்டத்திறனைப் பார்த்த ஆசிரியர்கள் ஹாக்கி விளையாடுமாறு ஊக்கப்படுத்தினர். குடும்பத்தின் ஆதரவுடன் புனேவில் பயிற்சி பெற்று இந்திய அணிக்கு வந்தார்.

இந்த 20 பேரில் பலருடைய வாழ்க்கையிலும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது: பெரிய வசதிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து வந்து, சிறிய ஊர்களில் இருந்து தொடங்கி, இன்று இந்தியாவுக்காகப் போராடி 44 வருடக் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

- ஷாலினி நியூட்டன்..