Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

நெகிழவைத்த தங்கை!

ரக்‌ஷா பந்தன் என்றாலே சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான அன்பையும் பாசத்தையும் கொண்டாடும் நாள். அந்த நாளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம். தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

சாலையோரக் கடை ஒன்றின் முன்பு எடுக்கப்பட்டதாகத் தெரியும் அந்தக் காணொளியில், பள்ளி மாணவி ஒருவர் அங்கு இருக்கும் வயதான தோற்றமுடைய ஒருவரின் கையில் ராக்கி கட்டுகிறார். கையில் ராக்கி கட்டிய பின்னர் அந்த நபரிடம் மாணவி அன்புடன் நடந்து கொள்வதும், அவரை மரியாதையுடன் அணுகுவதும் காணப்படுகிறது.

காணொளியில் இடம்பெறும் ஒரு காட்சி பார்ப்பவர்களின் கவனத்தை குறிப்பாக ஈர்த்துள்ளது. மாணவி அந்த நபரின் காலில் விழுந்து வணங்குகிறார். அதைப் பார்த்த அந்த நபரும் நெகிழ்ந்து நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கமாக ரக்‌ஷா பந்தன் குடும்ப உறவுகளுக்குள் மட்டுமே கொண்டாடப்படும் விழாவாகப் பார்க்கப்படும் நிலையில், உறவுக்கு அப்பாற்பட்ட ஒருவரிடம் சகோதரத்துவ உணர்வுடன் மாணவி நடந்துகொண்ட விதம் பலரையும் நெகிழச்செய்துள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், பலரும் மாணவியின் செயலைப் பாராட்டி வருகின்றனர். வசதி, தோற்றம், வயது, சமூக நிலை போன்ற எந்த வேறுபாடுகளையும் பார்க்காமல் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதே உண்மையான மனிதநேயம் என்பதை இந்தக் காட்சி நினைவூட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ரக்‌ஷா பந்தனின் அடிப்படை உணர்வே ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும் துணையாகவும் இருப்பதுதான். அந்த உணர்வை ரத்த உறவுகளுக்கு அப்பாலும் எடுத்துச் செல்லமுடியும் என்பதற்கு இந்தக் காணொளி ஒரு அழகான உதாரணமாக அமைந்துள்ளது

நடனமாடிய அம்மா - தம்பி!

மகனின் திருமணம் என்றால் ஒவ்வொரு தாய்க்கும் அது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அந்த மகிழ்ச்சியை வயதையும் மறந்து நடனமாக வெளிப்படுத்திய ஒரு தாயின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணவிழா மேடையில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடும் பெண்ணைப் பார்த்தால், அவர் மணமகனின் நண்பரோ அல்லது உறவினரோ என்றுதான் முதலில் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், அவர் வேறு யாருமல்ல… மணமகனின் தாயார் என்பதுதான் இந்தக் காணொளியின் சுவாரஸ்யம்.

மகனின் திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இசைக்கு ஏற்ப அந்தத் தாய் உற்சாகமாக நடனமாடுகிறார். அவருடன் இளைஞர்களும் இணைந்து நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வயதைப் பற்றிய எந்தத் தயக்கமும் இல்லாமல், மகனின் திருமண மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்கும் அவரது உற்சாகமே காணொளியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. சாய் அபயங்கர் இசையில் வெளியான பவளமல்லி மாடலுக்கு அப்படியே கச்சிதமாக நடன அசைவுகள் கொடுத்தது தான் இதன் சிறப்பு. இந்த வீடியோ தற்போது பலராலும் பகிர்ப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. அம்மாவா அவங்க? என்கிற ஆச்சர்யக் குரலும் இணைந்து ஒலிக்கிறது.