Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

பட்டுக் குட்டீஸ்க்கு படிப்பு இலவசம்!

சமூக வலைத்தளங்களில் வைரலான நேபால், ரோல்பா பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு இளங்கலைப் பட்டம் வரை இலவசக் கல்வி வழங்கப்படவுள்ளது. பருவமழைக் காலத்தில் இந்த சிறுமிகள் மழையில் நனைந்தபடி, பிங்க், பச்சை மற்றும் மஞ்சள் நிற ரெயின்கோட் அணிந்து மலைப்பாதையில் ஏறிப் பள்ளிக்குச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இணையத்தின் கியூட்டஸ்ட் வீடியோவாகவும் பலரது மனங்களில் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் உண்டு உறைவிடப் பள்ளியும், ஊரக நகராட்சியும் இவர்களுக்கு இலவச கல்வி வழங்க முன்வந்துள்ளன.

ருண்டிகதி ஊரக நகராட்சி- 4, தோல்பங்கைச் சேர்ந்த மஞ்சிதா புன், சியா கார்த்தி மற்றும் மஞ்சிதா கார்த்தி ஆகியோரே இந்த வைரல் சிறுமிகள். இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மூன்றாமவர் அவர்களின் அண்டை வீட்டார். இவர்களின் தந்தைகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். தற்போது சுர்பால் பஜாரில் உள்ள அட்வான்ஸ் சைல்டு கேர் சென்டரில் 3 வயதான சியா நர்சரியிலும், 5 வயதான மஞ்சிதா எல்.கே.ஜி-யிலும், 6 வயதான மற்றொரு மஞ்சிதா ஒன்றாம் வகுப்பிலும் பயின்றுவருகின்றனர்.

இந்தச் சிறுமிகள் தற்போது பயின்று வரும் அட்வான்ஸ் சைல்டு கேர் இங்கிலீஷ் போர்டிங் பள்ளியின் முதல்வர் தேஜ் பகதூர் புன், இவர்கள் மூவருக்கும் 6ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, 7ஆம் வகுப்பு முதல் இளங்கலை பட்டம் வரையிலான இவர்களின் உயர்கல்விக்கான முழுப் பொறுப்பையும், அதற்கான ஏற்பாடுகளையும் நகராட்சி ஏற்கும் என ருண்டிகதி ஊரக நகராட்சியின் தலைவர் ஜனக் புன் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான புவன் தாபா, நகராட்சித் தலைவர் ஜனக் புன், பள்ளி முதல்வர் தேஜ் பகதூர் புன் மற்றும் இந்த வைரல் வீடியோவை படம்பிடித்த லோகன் புன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், சிறுமிகளின் வீட்டிலேயே இந்த இலவச கல்விக்கான முறையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சென்று வரும் சாலைகளின் பாதுகாப்பு குறித்தும் பரிசீலிக்கப்படும் எனவும், அதற்கான வேலைகளும் துவங்கியுள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் எப்படி பள்ளிக்குச் சென்று வருகிறார்கள், அவர்களின் போக்குவரத்துக் குறித்த விவரங்களையும் நகராட்சி குழு தகவல்களைத் திரட்டி வருகிறது. சபாஷ் குட்டீஸ்!