உலகக் கோப்பை கொண்டாட்டம்!
உலகக்கோப்பை கால்பந்து என்பது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தையே தன் பக்கம் திருப்பும் மிகப்பெரிய உணர்வுப் பெருக்காக அது மாறிவிடுகிறது. மைதானத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலும், தவறவிடப்படும் ஒவ்வொரு வாய்ப்பும், இறுதி விசில் ஒலிக்கும் தருணமும் ரசிகர்களின் மனதில் அழியாத நினைவுகளாக பதிந்து விடுகின்றன. அதனால்தான் ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பல ஆண்டுகள் கடந்த பிறகும் பேசப்படும் தருணங்களாக மாறுகின்றன.
கடைசி நிமிடங்களில் அடிக்கப்படும் வெற்றிக் கோல்கள் உலகக்கோப்பையின் மிகப் பெரிய சுவாரஸ்யமாகக் கருதப்படுகின்றன. போட்டி டிராவாக முடியும் என ரசிகர்கள் நினைக்கும் நேரத்தில் ஒரு வீரர் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன. அந்தக் கொண்டாட்டங்களில் வீரர்களின் மகிழ்ச்சி, ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் பயிற்சியாளர்களின் உணர்ச்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகின்றன. இதோ இப்போதும் அதே போன்றதொரு தருணம்தான்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த ‘‘2026 ஃபிஃபா உலகக் கோப்பை ‘‘ கால்பந்து தொடர், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது, மைதானத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலான பல சுவாரஸ்யமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இறுதிப்போட்டியில் நடைபெற்ற ‘ஹாஃப்டைம் ஷோ’ (Halftime show) இணையத்தில் பெரும் வைரலானது. இதில் உலகப் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக்குழுவான BTS தங்களின் ‘டைனமைட்’ (Dynamite) பாடலை கால்பந்துக்கு ஏற்றவாறு வரிகளை மாற்றிப் பாடி அரங்கத்தை அதிர வைத்தனர்.
இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய சிறிய நாடான கேப் வெர்டே (Cape Verde) அணியின் 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா (Vozinha), தனது அபாரமான தடுப்பாட்டத்தால் உலகின் கவனத்தை ஈர்த்தார். ஓய்வு பெறும் வயதில் அவர் வெளிப்படுத்திய திறமையைக் கண்டு வியந்த ரசிகர்கள், இரவோடு இரவாக அவரைப் பின்தொடர்ந்ததால், அவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 29 மில்லியனைக் கடந்து இணையத்தில் சாதனை படைத்தது.
பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே 10 கோல்களைக் குவித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ‘கோல்டன் பூட்’ (Golden Boot) விருதை வென்று அசத்தினார். அதேபோல், நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) அடித்த அபாரமான கோல்களும், அவரது அணியினர் மைதானத்தில் செய்த ‘வைக்கிங் ரோயிங்’ (Viking rowing) கொண்டாட்டமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட தருணங்களாக மாறின.
2026 உலகக் கோப்பைத் தொடர் வெறும் கோல்களாலும் வெற்றிகளாலும் மட்டும் நினைவுகூரப்படாமல், இத்தகைய எதிர்பாராத வைரல் தருணங்களாலும், வீரர்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டங்களாலும் கால்பந்து வரலாற்றில் நீங்காத இடம்பிடித்து எங்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

