இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலன்!
கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் இந்தியாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளன. இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர், டெனெட், ஓப்பன்ஹெய்மர் போன்ற படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நோலன், தற்போது தி ஒடிஸி திரைப்படத்தின் இந்திய வெளியீட்டை முன்னிட்டு மும்பை வந்ததிலிருந்து சமூக வலைதளங்கள் முழுவதும் அவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
மும்பை விமான நிலையத்தில் நோலன் வந்த தருணம், தாஜ் ஹோட்டலுக்குள் சென்ற காட்சிகள், டாம் ஹாலண்ட் மற்றும் மேட் டேமனுடன் ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோக்கள் ஆகியவை இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக, ‘‘ஹாலிவுட்டின் மிகப்பெரிய இயக்குநர் இந்தியா வந்துள்ளார்” என்ற உணர்வு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், மும்பையின் பாரம்பரிய ஈரானி கஃபேவில் டாம் ஹாலண்ட், மேட் டேமன் ஆகியோருடன் நோலன் கட்டிங் சாய் மற்றும் பன் மஸ்கா சாப்பிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிக வேகமாகப் பரவின. உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தியாவின் சாதாரண உணவகத்தில் அமர்ந்து தேநீர் அருந்திய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
தி ஒடிஸி திரைப்படத்தின் இந்திய பிரீமியர் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களுடன் நோலன் கலந்துகொண்ட புகைப்படங்கள், ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபிகள், சிவப்புக் கம்பள வரவேற்பு, IMAX திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு திரையிடல் போன்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து டிரெண்டாகின. இதில் இந்த மாதம் இறுதியில் ஸ்பைடர் மேன் திரைப்படமும் வரவிருக்கும் நிலையில் டாம் ஹாலண்ட் வருகைக்கு டபுள் வரவேற்பை இந்திய ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர். எங்கு சென்றாலும் கிறிஸ்டோபர் நோலனை மக்கள் அடையாளம் கண்டு கொள்வதற்கு முன்பு ஸ்பைடர் மேன் கேரக்டரில் நடித்த டாம் பிரம்மாண்ட வரவேற்பு பெறுகிறார்.

