Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வைரலோ வைரல்

தடுமாறும் நேபாளம்!

இயற்கையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நேபாளம், இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் சகதியிலும், கட்டட இடிபாடுகளிலும் சிக்கியுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 903 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சகதிக்குள் சிக்கியுள்ளவர்களையும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களையும் மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஏற்கனவே பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நேபாளத்தின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், “நாடு கற்பனை செய்ய முடியாத மற்றும் நெஞ்சை உலுக்கும் பேரழிவைச் சந்தித்து வருகிறது” என நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதும் நேபாள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே, நேபாளத்தில் இருந்து வெளியாகி வரும் வெள்ளப் பாதிப்புகள், மீட்புப் பணிகள் மற்றும் தவிக்கும் மக்களின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், சகதியில் புதைந்த சாலைகள், இடிபாடுகளாக மாறிய கட்டடங்கள் என ஒவ்வொரு காட்சியும் அங்கு ஏற்பட்டுள்ள பேரழிவின் கொடூரத்தை உலகின் கண்முன் கொண்டு வருகிறது.

அதிலும், சில நாட்களுக்கு முன்பு இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமியின் காட்சி பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. உயிருக்கு போராடிய அந்தச் சிறுமி மீட்கப்பட்ட சம்பவம், பெரும் சோகத்திற்கு மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திய தருணமாக அமைந்துள்ளது.

அதேபோல், தனது தங்கையை முதுகில் சுமந்துகொண்டு பெற்றோர்களைத் தேடி அலைந்த சிறுவனின் காட்சியும் சமூக வலைத்தளங்களில் பலரது மனதை உலுக்கியுள்ளது. பெற்றோர்களைத் தேடி அலைந்த அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, இந்தப் பேரழிவால் குடும்பங்கள் எந்த அளவுக்கு சிதைந்துள்ளன என்பதற்கான வேதனையான சாட்சியாக மாறியுள்ளது.

ஒருபுறம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் காணாமல் போன தங்களது உறவுகளைத் தேடி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தவித்து வருகின்றன. இடிபாடுகளுக்கு இடையே இன்னும் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

எங்கும் சோகம்… எங்கும் தேடல்…

எங்கும் பிரார்த்தனை…

நேபாளத்தின் இந்த நெஞ்சை உலுக்கும் பேரழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்து வரும் உலக மக்கள், காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இயற்கையின் கோரத்தாண்டவத்தில் தடுமாறும் நேபாளம்… உயிர்களைத் தேடும் மீட்புக் குழுக்கள்… உறவுகளைத் தேடும் குடும்பங்கள்… உலகையே கலங்க வைத்த குழந்தைகளின் காட்சிகள்.

903 உயிர்கள் பறிபோன நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது என்ற கேள்வி ஒட்டுமொத்த உலகையும் பதற வைத்துள்ளது.