தேவர் வாக்குகள் தேவை, தலைவர்கள் தேவையில்லையா? பிரதமர் மோடி-எடப்பாடிக்கு எதிராக நெல்லை, திண்டுக்கலில் போஸ்டர்: தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா? என கேள்வி
நெல்லை: ‘தேவர் சமுதாய வாக்குகள் தேவை, தலைவர்கள் தேவையில்லையா’, ‘தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா?’ என மோடி, எடப்பாடி பழனிசாமியை கண்டித்து நெல்லை, திண்டுக்கலில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ்சுடன் செங்கோட்டையனும் கை கோர்த்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் மத்தியிலும், கொங்கு மாவட்டங்களிலும் பெரும் எதிர்ப்பை அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உருவாக்கியுள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளும், கொங்கு மாவட்டங்களில் உள்ள சமுதாய வாக்குகளும் அதிமுகவிற்கு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்நிலையில் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி, பாஜவை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில், ‘முக்குலத்து சொந்தங்களே உஷார், எடப்பாடி பழனிசாமிக்கு தேவர் சமுதாய வாக்குகள் தேவையாம். பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி தேவையாம், ஆனால் இவர்களுக்கு தேவர் சமுதாய தலைவர்கள் தேவை இல்லையாம். இருங்க ஜி..பாடம் புகட்டுகிறோம். தென்னக தேவர் பேரவை’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் படத்துடன் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர்களின் ஓரத்தில் எடப்பாடி, அமித்ஷாவின் படங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முக்குலத்தோர்கள் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களில் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த போஸ்டர்கள் பாஜவினரால் பல இடங்களில் கிழிக்கப்பட்டன. இதேபோல், மோடியை கண்டித்தும் நெல்லையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா? பீகாரில் மோடி பிரசாரம் - தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களை தமிழர்கள் துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டி பிரதமர் மோடி பொய் பிரசாரம்.
தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசி வரும் பிஜேபியை நெல்லையை விட்டு மட்டுமல்ல, தமிழ்நாட்டை விட்டே துடைத்து எறிவோம். மானமுள்ள தமிழர்களே சிந்திப்பீர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டுக்கல்: தேவர் பேரவை சார்பில், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திண்டுக்கல் மற்றும் செம்பட்டி, வத்தலகுண்டு, நத்தம், நிலக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் அதிக எண்ணிக்கையில் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், முக்குலத்து சொந்தங்களே உஷார்!, எடப்பாடி பழனிசாமிக்கு தேவர் சமுதாய வாக்குகள் தேவையாம், பாஜவுக்கு எடப்பாடி பழனிசாமி தேவையாம், ஆனால் இவர்களுக்கு தேவர் சமுதாய தலைவர்கள் தேவை இல்லையாம்! இருங்க ஜி... பாடம் புகட்டுகிறோம்! என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்